ஆளுநர் முடிவுக்குப் பிறகே காங்கிரஸ் நிலைப்பாடு: ராகுலை சந்தித்த பின் திருநாவுக்கரசர் பேட்டி

தமிழக அரசியல் சூழல் தொடர்பாக மாநிலப் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் எடுக்கும் முடிவுக்குப் பிறகே காங்கிரஸ் அதன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும்
ஆளுநர் முடிவுக்குப் பிறகே காங்கிரஸ் நிலைப்பாடு: ராகுலை சந்தித்த பின் திருநாவுக்கரசர் பேட்டி

தமிழக அரசியல் சூழல் தொடர்பாக மாநிலப் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் எடுக்கும் முடிவுக்குப் பிறகே காங்கிரஸ் அதன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் என்று அக்கட்சியின் தமிழகத் தலைவர் சு. திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழகத்துக்கான மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், மாநிலத் தலைவர் சு. திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், கட்சியின் மூத்த தலைவர்கள் குமரி அனந்தன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், செல்லக்குமார், கே.வி. தங்கபாலு, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராமசாமி, ஜெயக்குமார் ஆகியோர் வெள்ளிக்கிழமை சந்தித்தனர்.
இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் கூறியதாவது: தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து ராகுல் காந்தியுடன் விவாதித்தோம். இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக முடிவு செய்வதற்கு எதுவுமில்லை. ராகுல் காந்தியிடம் விவாதித்த அனைத்து விஷயங்களையும் ஊடகங்களுக்கு தெரிவிக்க முடியாது.
சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க மாநில ஆளுநர் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அரசியலமைப்புக்கும் நாடாளுமன்றம், சட்டப்பேரவை விதிமுறைகளுக்கு உள்பட்டும் அவர் உடனடியாகச் செயல்பட வேண்டும். தமிழகத்தில் தாற்காலிக முதல்வர் நீடிக்க வேண்டிய சூழல் உள்ளது. செயல்படக்கூடிய அரசும், முதல்வரும் தமிழகத்துக்கு தேவை. இதை ஆளுநர் உறுதிப்படுத்த வேண்டும்.
மத்தியில் ஆட்சியில் உள்ள அரசுக்கு தலைமை தாங்கும் பாஜகவுக்கு தமிழகத்தில் எவ்வித அஸ்திவாரமும் கிடையாது. தமிழகத்தில் கால் பதிப்பதற்காகவும், குடியரசுத் தலைவர் தேர்தலை மனதில் கொண்டும் வட மாநிலங்களில் விளையாடிய அரசியலை தமிழகத்திலும் தொடர பிரதமர் மோடி விரும்புகிறார்.
தமிழகத்தில் ஆளுநர் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். இந்த விவகாரத்தில் ஆளுநர் முடிவு மேற்கொண்ட பிறகே காங்கிரஸ் கட்சி அதன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பிரதமரைச் சந்திக்க தமிழக முதல்வர் வந்தது பாராட்டுக்குரியது. ஆனால், மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை தலைமையிலான அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை. இதன் மூலம் பிரித்தாளும் நிலையைக் கடைப்பிடித்து ஆதாயம் தேட பாஜக முயற்சிக்கிறது. தமிழகத்தில் பின்புற வாசல் வழியாக கால் பதிக்க பாஜக முயற்சி செய்கிறது என்றார் திருநாவுக்கரசர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com