கூவத்தூர் தனியார் நட்சத்திர விடுதியில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றமா..?

அதிமுக எம்எல்ஏக்கள் சட்டவிரோதமாக, கிழக்கு கடற்கரை சாலை கூவத்தூரில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் தங்க

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் சட்டவிரோதமாக, கிழக்கு கடற்கரை சாலை கூவத்தூரில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் உள்ள மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் ஒரு தனியார் நட்சத்திர விடுதி உள்ள பகுதியில் சசிகலா ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன. இதனால் அன்றாடப் பணிக்கு செல்லும் அப்பகுதி மக்களைக் கூட விடாமல் வெளியிருந்து குவிக்கப்பட்டுள்ள குண்டர்கள் தடுத்து விரட்டி வருகின்றனர்.

மேலும், சொந்த வீடுகளுக்கு செல்வதற்கே, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டைகளை காண்பிக்க வேண்டும் என வற்புறுத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அரசியல் தலைவர்களின் வாகனங்கள், அதிவேகத்தில் அடிக்கடி செல்வதால் கால்நடைகளை ஓட்டிச் செல்வதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றமான சூழல் தங்களையும் தொற்றிக்கொண்டு, அன்றாட பணிகளை பாதித்துள்ளது சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தங்களது கவலைகளை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அந்த பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதிக்கும் வரும் வாகனங்களை முற்றுகையிட்டனர். எம்எல்ஏக்களை விடுதியிலிருந்து வெளியேற கூறி ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதாகவும், இதையடுத்து நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் கார்கள் மூலம் அவசர அவசரமாக வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com