சீமைக் கருவேல மரங்களை பிப்.27-க்குள் அகற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வரும் 27ஆம் தேதிக்குள் சீமைக் கருவேல மரங்களை அகற்ற, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வரும் 27ஆம் தேதிக்குள் சீமைக் கருவேல மரங்களை அகற்ற, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி, மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் எல்கைக்குள்பட்ட 13 மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்றி அதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்வும், சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அடங்கிய அமர்வின் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீமைக் கருவேல மரங்கள் பல இடங்களில் அகற்றப்படாமல் உள்ளன. நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூட சீமைக் கருவேல மரங்களை அகற்றப்படவில்லை என்றனர். அதற்கு அரசு வழக்குரைஞர், 13 மாவட்டங்களிலும் 30 முதல் 40 சதவீத சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. பல இடங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் முழுமையாக அகற்றப்படும் என்றார்.
அப்போது வைகோ, தனியார் நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சீமைக் கருவேல மரங்களை உடனடியாக முழுமையாக அழிப்பது என்பது கடினமான செயல், அரசு அதிகாரிகளும் அதற்கான பணிகளை செய்து வருகின்றனர். நீங்கள் கூட கலிங்கப்பட்டியில் மக்களுடன் சேர்ந்து சீமைக் கருவேல மரங்களை அகற்றியதை செய்திகளில் பார்த்தோம். அதற்கு பாராட்டுகள் என்றனர். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதில் மெத்தனமாகச் செயல்பட்டதாக கூறி, ராமநாதபுரம் ஆட்சியர் எஸ்.நடராஜன் மீது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாகவே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்தது.
இதன் பேரில் வெள்ளிக்கிழமை ஆஜரான ராமநாதபுரம் ஆட்சியர் எஸ்.நடராஜன், ராமநாதபுரம் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்து, ராமநாதபுரத்தில் சீமைக் கருவேல மரங்கள் அதிகளவில் இருப்பதால் அவற்றை முற்றிலும் அழிக்க இரண்டு மாதம் கால அவகாசம் கோரினார். இதைப் பதிவு செய்த நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து அவரை விடுவித்து உத்தரவிட்டனர்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி, வரும் 27ஆம் தேதி அதுதொடர்பான அறிக்கையை மாவட்ட ஆட்சியர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் பணிகளை மாவட்ட நீதிபதிகளும், வழக்குரைஞர் ஆணையர்களும் தொடர்ந்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்கள், தனியாருக்குச் சொந்தமான இடங்கள் என அனைத்து பகுதிகளிலும் இருக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். சீமைக் கருவேல மரங்களின் தீமைகள் குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com