மாஃபா பாண்டியராஜனின் மனமாற்றத்தைப் பிரதிபலித்த டிவிட்டர்

இதுவரை வி.கே. சசிகலா அணியின் மிக முக்கிய பலமாக விளங்கிய மாஃபா பாண்டியராஜன், மனம் மாறி தற்போது முதல்வர் பன்னீர்செல்வம் அணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
மாஃபா பாண்டியராஜனின் மனமாற்றத்தைப் பிரதிபலித்த டிவிட்டர்


சென்னை: இதுவரை வி.கே. சசிகலா அணியின் மிக முக்கிய பலமாக விளங்கிய மாஃபா பாண்டியராஜன், மனம் மாறி தற்போது முதல்வர் பன்னீர்செல்வம் அணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

நேற்று வரை சசிகலாவுடன் இருந்த பள்ளிக் கல்வித் துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அதிமுகவுக்கு வாக்களித்த தொகுதி வாக்காளர்களின் குரலுக்கு மதிப்பளிப்பேன் என்று, இன்று காலை தனது டிவிட்டர் பக்கத்தில் மாஃபா பாண்டியராஜன் கருத்து வெளியிட்டிருந்தார்.

டிவிட்டர் கணக்கில் தொடர்ந்து தனது கருத்துகளை பதிவு செய்து வந்த மாஃபா பாண்டியராஜன், சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் குரல் எழுப்பிய போது உடனடியாக அதற்கு கண்டனம் தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

பன்னீர்செல்வத்தின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதிராக மாஃபா பாண்டியன் டிவிட்டரில் பதிவிட, அதற்கு எதிர்மறையான கருத்துக்களே பொதுமக்களிடம் இருந்து வந்து குவிந்தது.

இதனால், ஒரு கட்டத்துக்கு மேல் பொது மக்களின் கருத்து இதுதான் என்பதை மாஃபா பாண்டியன் புரிந்து கொண்டிருப்பாரோ என்னவோ, இன்று காலை அதே டிவிட்டர் பக்கத்தில், அதிமுகவுக்கு வாக்களித்த தொகுதி மக்களின் குரல்களுக்கு மதிப்பளிப்பேன் என்று தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதை மறைமுகமாகக் கூறியிருந்தார்.

அவர் சொல்ல வருவது இதுதானா என்று யூகித்து  முடிக்கும் முன்பே, முதல்வர் பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு வந்து அவரை நேரடியாக சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். மேலும் பல எம்எல்ஏக்களும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக, சசிகலாவுடன் சென்று ஆளுநரை சந்தித்து வந்த மாஃபா பாண்டியராஜனனின் இந்த மன (அணி) மாற்றத்துக்கு சமூக தளங்கள் வாயிலாக பொதுமக்களின் கருத்து நேரடியாக சென்று சேர்ந்ததும் ஒரு காரணம் என்றே கருதலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com