யாருடைய உத்தரவுக்காக காத்திருக்கிறார் ஆளுநர்?

தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வராவது யார் என்ற கேள்விக்கான விடையை அறிய இன்னும் ஒருசில நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று தெரிகிறது.
யாருடைய உத்தரவுக்காக காத்திருக்கிறார் ஆளுநர்?


சென்னை: தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வராவது யார் என்ற கேள்விக்கான விடையை அறிய இன்னும் ஒருசில நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று தெரிகிறது.

தமிழக அரசை கைப்பற்றப் போவது யார் என்பதை தீர்மானிக்கப் போகும் ஆளுநர் வித்யாசாகர் ராவ், இந்த விஷயத்தில் நிதானத்தைக் கடைபிடித்து வருகிறார்.

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலர் சசிகலாவையோ, முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தையோ ஆட்சி அமைக்க அழைப்பதில் அவருக்கு எந்த அவசரமும் இல்லை.

தமிழக அரசியல் நிலவரம் குறித்து இரண்டு பக்க அறிக்கையை, ஆளுநர் மாளிகை, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியதாக நேற்று மாலை செய்திகள் வெளியானது. அதில், தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தான் கொடுத்த ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறுவது குறித்தும், வி.கே. சசிகலா, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கேட்டுக் கொண்டது குறித்தும் விரிவாக விளக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் நேற்று இரவே, மத்திய அரசுக்கு எந்த அறிக்கையும் அனுப்பப்படவில்லை என்று ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துவிட்டது.

அறிக்கை அனுப்பப்பட்டதாக வெளியான செய்தியிலும், அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதிலும் பல சந்தேகங்கள் எழுகின்றன.

இதற்கிடையே, தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், காவல்துறை ஆணையர் டி.கே. ராஜேந்திரன் மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் எஸ். ஜார்ஜ் ஆகியோரை ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேரில் சந்தித்து நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழக எம்எல்ஏக்கள், அவர்களுக்கு விருப்பமில்லாமல் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்து ஆளுநர் விசாரித்துள்ளார். மேலும், தமிழகக் காவல்துறை, பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தரப்பு என யாருக்கும் ஆதரவாக இல்லாமல் தனித்து செயல்படுமாறு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இவ்வளவும் ஒரு பக்கம் நடந்து வந்தாலும், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன், பரபரப்பை இன்னும் நீளச் செய்வது ஏன்? என்ற கேள்விக்கு, சொத்துக் குவிப்பு வழக்கில் அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்படும் வரை காத்திருக்கலாம் என்று முடிவு செய்திருப்பதே காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com