யார் முதல்வர்? இழுபறி நீடிப்பு

தமிழகத்தில் ஆட்சியில் அமர்வது யார்? என்பதில் இழுபறி நீடிக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து தமிழக அரசியலில் தற்போது அசாதாரண சூழல் நிலவுகிறது.
யார் முதல்வர்? இழுபறி நீடிப்பு

தமிழகத்தில் ஆட்சியில் அமர்வது யார்? என்பதில் இழுபறி நீடிக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து தமிழக அரசியலில் தற்போது அசாதாரண சூழல் நிலவுகிறது. ஆட்சியமைக்க யாரை அழைப்பது என்பது குறித்து ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இதனால் மாநில அரசியலில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.
இதனிடையே தமிழக அரசியல் நிலவரம், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், மாநில போலீஸ் டைரக்டர் ஜெனரல் டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர போலீஸ் ஆணையர் ஜார்ஜ் ஆகியோருடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வி.கே.சசிகலா வியாழக்கிழமை ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். மேலும் தமக்கு ஆதரவாக உள்ள எம்.எல்.ஏ..க்களின் பட்டியலையும் ஆளுநரிடம் சமர்பித்தார். இதேபோல முதல்வர் பொறுப்பு வகிக்கும் ஓ.பன்னீர்செல்வமும் ஆளுநரை நேரில் சந்தித்துப் பேசினார். நல்லது நடக்கும், தர்மம் வெல்லும் என்று மட்டும் கூறிய அவர், ஆளுநருடனான சந்திப்பின் விவரங்களைத் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் திடீர் திருப்பமாக அதிமுக அவைத் தலைவர் பதவியிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் இ.மதுசூதனன் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், அக்கட்சியின் சட்டப்பேரவைக்குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான வி.கே.சசிகலா உத்தரவிட்டுள்ளார்.
புதிய அவைத்தலைவராக கே.ஏ.செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியின் அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார். மதுசூதனனுடன் கட்சியினர் எவரும் தொடர்புகொள்ள வேண்டாம் என்றும் செங்கோட்டையனுக்கு ஆதரவு தருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே தம்மை அவைத்தலைவர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் நீக்க சசிகலாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று மதுசூதனன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் சசிகலா தம்மை நீக்குவதற்கு முன்னதாகவே அவரை தாற்காலிகப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.
கட்சி விதிகளின்படி பொதுக்குழு உறுப்பினர்கள்தான் கட்சியின் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் தாற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட பொதுச் செயலாளரான சசிகலாவை கட்சித் தலைவராக அங்கீகரிக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாவது கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்றும் சசிகலா 2012 மார்ச் 31-இல்தான் கட்சியில் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே எம்.எல்.ஏ.க்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதாக பன்னீர்செல்வம் தரப்பினர் கூறிவரும் குற்றச்சாட்டுகளை சசிகலா ஆதரவாளர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். பன்னீர்செல்வம் ஆதரவாளரான ஆறுகுட்டி எம்.எல்.ஏ., அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிறைவைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அவர்கள் சுதந்திரமாக மக்களைச் சந்திக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
ஆனால், சசிகலா ஆதரவாளரான வெங்கடாசலம், சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சிறைவைக்கப்படவில்லை என்றும் வெளியிலிருந்து வரும் தேவையில்லாத அழைப்புகளுக்கு பதில் சொல்லவேண்டி வரும் என்பதால் செல்லிடப் பேசிகள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
அதிமுக சட்டப்பேரவைகுழு தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்து நாள்களாகியும் ஆளுநர் மாளிகையிலிருந்து எந்த அழைப்பும் வராதநிலையில், வி.கே.சசிகலா நிச்சயம் முதலமைச்சராகப் பதவியேற்பார் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆட்சி அமைப்பது தொடர்பாக, ஆளுநர் வித்யாசாகர் ராவ் மாலையில் ஏதேனும் அறிவிப்புகளை வெளியிடுவார் என சசிகலா உள்ளிட்டோர் காத்திருந்தனர். ஆனால், எந்தவிதமான அறிவிப்புகளும் அவரது தரப்பில் இருந்து வரவில்லை.
இதையடுத்து, மாலையில் அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து வி.கே.சசிகலா திடீரென ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து அவரும் ஊடகங்களைச் சந்தித்துப் பேசினார். இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் ஆளுநர் கட்டிக் காப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கனவு பலிக்காது
அதிமுகவைக் கைப்பற்ற நினைப்பவர்களின் கனவானது பகல் கனவாகவே முடியும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் வெள்ளிக்கிழமை குவிந்திருந்த தொண்டர்களிடையே அவர் பேசியது: "100 ஆண்டுகள் அல்ல, ஆயிரம் ஆண்டுகள் அதிமுக நிலைத்து நிற்கும். மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளைத் தொடர்ந்து ஆற்றுவோம்' என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி சொல்லுவார். மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கஷ்டப்பட்டு வளர்த்த அதிமுகவை சிலர் கைப்பற்ற முயற்சிப்பதை அனுமதிக்க மாட்டோம்.
அதிமுக தொண்டனுடைய சொத்து. இதை யாருடைய குடும்பச் சொத்தாகவும் மாற்றுவதற்கு அனுமதிக்க மாட்டோம். இதற்காக ஒருமித்த குரலில் இயங்கிக் கொண்டிருக்கிறோம். உறுதியாக நல்லதே நடக்கும். தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். கடைசியில் தருமமே வெல்லும். கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற நினைக்கும் சிலரின் கனவு, பகல் கனவாகவே முடியும் என்றார்.
அதிகாரிகள் சந்திப்பு: இந்த நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஐஏஎஸ் அதிகாரிகள் ஞானதேசிகன், அதுல் ஆனந்த் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
ஆளுநர் ஜனநாயகம் காப்பார்
அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் கட்டிக் காப்பார் என்று நம்புவதாகவும், பொறுத்திருந்து பார்ப்போம் எனவும் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா தெரிவித்தார்.
ஆட்சி அமைக்க உரிமை கோரியும் ஆளுநர் அழைப்பு விடுக்காத நிலையில், போயஸ் தோட்ட இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்களை சசிகலா சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எம்.ஜி.ஆருக்குப் பிறகு, ஜெயலலிதா வழிநடத்திய அதிமுக நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்துடன் உள்ளது. 5 ஆண்டு ஆட்சியை முடித்து மீண்டும் ஆட்சியைப் பிடித்த அதிமுக அரசுக்கும், கட்சிக்கும் எந்த சிறு தொய்வும் ஏற்படாமல் நாம் அனைவரும், ஒன்றரை கோடி தொண்டர்களும் காப்பாற்றுவோம். அனைவரது ஒத்துழைப்போடு இந்த இயக்கம் மென்மேலும் வளரும். எனவே, எதற்கும் கவலைப்பட வேண்டாம். கட்சிக்குத் தோல்வி என்பதே இல்லை.
இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் காப்பார் என்று நம்புகிறோம். எனவே, பொறுத்திருந்து பார்ப்போம் என்றார் சசிகலா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com