லட்சியம் இல்லாத வாழ்க்கை முகவரி இல்லாத கடிதம் போன்றது : கலியமூர்த்தி

லட்சியம் இல்லாத வாழ்க்கை முகவரி இல்லாத கடிதத்தைப் போன்றது என்று ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி அ.கலியமூர்த்தி கூறினார்.
சென்னையில் நடைபெற்று வரும் விவேகானந்த நவராத்திரி விழாவில் வெள்ளிக்கிழமை பேசிய ராமகிருஷ்ண மடம் துறவி சுவாமி பரமசுகானந்தர். உடன் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி அ.கலியமூர்த்தி.
சென்னையில் நடைபெற்று வரும் விவேகானந்த நவராத்திரி விழாவில் வெள்ளிக்கிழமை பேசிய ராமகிருஷ்ண மடம் துறவி சுவாமி பரமசுகானந்தர். உடன் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி அ.கலியமூர்த்தி.

லட்சியம் இல்லாத வாழ்க்கை முகவரி இல்லாத கடிதத்தைப் போன்றது என்று ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி அ.கலியமூர்த்தி கூறினார்.
ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சார்பில் விவேகானந்த நவராத்திரி, மெரீனா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
5-ஆவது நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் "எல்லோருக்கும் விவேகானந்தர்' என்ற தலைப்பில், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி அ.கலிய மூர்த்தி பேசியதாவது:
வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமானால் தாயைப் போற்ற வேண்டும். அதற்கு சுவாமி விவேகானந்தர், தாமஸ் ஆல்வா எடிசன் போன்றோர் உதாரணம். ஒழுக்கத்தில் நிலைபெற வேண்டும் என்றால் கல்வியோடு ஒழுக்கத்தைப் போதிக்க வேண்டும்.
கல்வியின் மூலம் அறிவை விரிவடையச் செய்ய வேண்டும். மனிதப் பண்பு இருந்தால்தான் கல்வி இயல்பாக வரும். வாளின் கூர்மை வாழ்வை அழிக்கும், நூலின் கூர்மை வாழ்வை அளிக்கும். இதைக் கருத்தில் கொண்டு, வயது வித்தியாசம் பார்க்காமல் தொடர்ந்து பல நூல்களை அனைவரும் படிக்க வேண்டும். இவை அனைத்தையும் சுவாமி விவேகானந்தர் தன் வாழ்க்கையில் கடைப்பிடித்து, பிறருக்கும் எடுத்துரைத்தார்.
ஆகையால் எல்லோருக்கும் உடையவராக அவர் விளங்கினார். அதற்கு அவரின் தலைமைப் பண்புகள்தான் காரணம் என்று கலியமூர்த்தி கூறினார்.
முன்னதாக, "கற்றோர் கடைதேறினார்' என்ற தலைப்பில் சுவாமி பரமசுகானந்தர் பேசியதாவது:
ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போதே முழுமை அடைந்தவன்தான். இதை அறிந்து கொள்வதே கல்வி. இதை அறியாமல் இருந்தால், எத்தகைய கல்வி பெற்றிருந்தாலும் அவர் கல்லாதவரே. மனித மாண்பு, மனிதநேயம், ஒழுக்கம், தூய்மை, சத்யம், உண்மை போன்றவற்றை உலகிற்கு எடுத்துரைத்தவர் சுவாமி விவேகானந்தர். இதனால் அவர் மனித குலத்துக்கே குருவாக விளங்குகிறார். இவற்றைப் பின்பற்றித்தான், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், சுப்ரமணிய பாரதி, வ.உ.சி. போன்றவர்கள், மனித குலத்துக்குச் சேவையாற்றினார்கள் என்றார் அவர்.
முன்னதாக, சென்னை தங்கசாலையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் விவேகானந்தர் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பஜனைப் பாடல்களை நிகழ்ச்சியில் பாடினர். இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com