2வது நாளாக கூவத்தூருக்கு செல்கிறார் சசிகலா..!

காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூர் தனியார் நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களை 2வது நாளாக சந்தித்து ஆலோசனை நத்த சென்று கொண்டிருக்கிறார் சசிகலா.

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூர் தனியார் நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களை 2வது நாளாக சந்தித்து ஆலோசனை நத்த சென்று கொண்டிருக்கிறார் சசிகலா.

தமிழக கல்வித்துறை அமைச்சரும் ஆவடி சட்டபேரவை உறுப்பினருமான மாஃபா பாண்டியராஜன் நேற்று முதல்வர் பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு நேரிடையாக சென்று தனது ஆதரவு தெரிவித்தார். இவரைத்தொடர்ந்து அதிமுக செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சரும் மூத்த நிர்வாகியான பொன்னையனும் பன்னீர்செல்வத்தை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

அடுத்தடுத்து நடந்த பரபரப்பைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, தனது ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கூவத்தூர் தனியார் நட்சத்திர விடுதிக்கு புறப்பட்டு சென்று எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, அதிமுகவை பிளவுபடுத்த சிலர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இந்தநேரத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஆளுநரின் முடிவுக்காக காத்திருப்போம்.

மேலும் தாமதம் செய்தால் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசித்து அதிரடி முடிவுகளை எடுப்போம் என தெரிவித்தார்.

இந்நிலையில், 2வது நாளாக கூவத்தூர் தனியார் நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்க புறப்பட்டு சென்று கொண்டிருக்கிறார்.

அப்போது காரில் இருந்தபடியே செய்தியாளர்களிடம் சசிகலா கூறுகையில், எம்ஜிஆர் இறந்தபோது அதிமுகவில் இதே போன்ற நிலை ஏற்பட்டது. அதன் பிறகு ஜெயலலிதா அந்த கஷ்ட நஷ்டங்களில் இருந்து வென்று வந்து இன்று வரை இந்த கட்சியையும் ஆட்சியையும் கொண்டுவந்தார். அன்று கட்சியை நடத்தி கொண்டிருந்த நிகழ்வுகள் அத்தனையும் கூட இருந்து பார்த்துள்ளேன்.
எங்களுக்கு இந்த சலசலப்பு எல்லாம் புதிதல்ல. அதிமுகவை இரண்டாக உடைக்க வேண்டும் என்று நினைத்து வெளியே சென்றிருப்பவர்கள் புல்லுருவிகள் என்று கூறினார்.

இன்று நடக்கும் நிகழ்வுகளை பத்திரிகையை சேர்ந்தவர்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. உங்களுக்கே புரியும் இந்த சூழ்ச்சியில் யார் யார் இருக்கிறார்கள் என தெரியும்.

நான் ஏதோ உயிரை விட்டுவிடுவேன் என்று ஆளுநருக்கு கடிதம் எழுதியதாக கூறப்படும் கடிதம். சமூக வலைதளத்தில் வருவதாக நண்பர் கூறினார். ஒரு பெண் அரசியலில் இருப்பது ரொம்ப கஷ்டமானது. இதேபோல் ஜெயலலிதா சந்தித்துள்ளார் அவர் மீண்டு வந்துள்ளார் என்றும் அதிமுக பொதுச் செயலாளராக நான் வந்துள்ளேன். இந்த சோதனைகள் பழக்கப்பட்ட ஒன்று. இதிலிருந்து நான் வெற்றி பெறுவேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஒரளவிறகு பார்த்து கொண்டுள்ளோம். ஜனநாயகத்தை நம்புகிறோம். எங்களிடம் உள்ள எம்எல்ஏக்கள் அன்போடு உள்ளார்கள். அவர்களிடம் பேசுவதற்கு நான் செல்கிறேன்.

எம்பிக்கள் பன்னீர்செல்வம் அணிக்கு செல்வதன் பின்னணி உங்களுக்கு தெரியும். யார் பின்னணியில் உள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியும். பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுக்கு தக்க நேரத்தில் பதில் அளிப்பேன். நிச்சயம் அதிமுக ஆட்சிதான் தொடரும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com