தொட்டியம் அருகே விவசாயி தற்கொலை: விவசாய சங்கத்தினர், உறவினர்கள் மறியல்

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே வங்கிக் கடன் நெருக்கடி காரணமாக, விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும்,

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே வங்கிக் கடன் நெருக்கடி காரணமாக, விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், விவசாய சங்கத்தினர், உறவினர்கள் முசிறியில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
தொட்டியம் அருகே அம்மன்குடியைச் சேர்ந்தவர் வீரமலை மகன் ராதாகிருஷ்ணன் (59). விவசாயம் மற்றும் கறவைமாடு வளர்த்து பால் வியாபாரம் செய்து வந்தார். இவர், கொளக்குடியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கடன் பெற்று கறவை மாடு வாங்கி, அதன் பாலை பாப்பாப்பட்டியில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தி சங்கத்தில் ஊற்றி வந்துள்ளார்.
ராதாகிருஷ்ணன் சுய உதவிக் குழு பொறுப்பாளராக இருந்ததால், 72 பேருக்கு கடன் வழங்கப்பட்டு கறவை மாடுகள் வாங்கியதாகத் தெரிகிறது. கடன் பெற்ற அனைவரும் கடன் தொகையை செலுத்திய நிலையில், பாப்பாப்பட்டி பால் சங்கத்தில் நடைபெற்ற முறைகேடு காரணமாக வங்கிக்கு கடன் தொகை சென்றடையவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வங்கி நிர்வாகம் கடன் தொகையை செலுத்துமாறு ராதாகிருஷ்ணன் உள்பட 72 பேருக்கும் நெருக்கடி கொடுத்ததாம். இதுகுறித்து பால் உற்பத்தி சங்கத்தின் உயரதிகாரிகளுக்கு புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். மேலும், ராதாகிருஷ்ணன் மனைவி ராணியின் நூறு நாள் வேலைத் திட்ட கூலித் தொகையையும் வங்கி நிர்வாகம் தராமல், கறவை மாட்டுக்கு வாங்கிய கடனில் வரவு வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், மிகுந்த மன உளைச்சலில் இருந்த ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை (பிப். 10) விஷம் குடித்து மயங்கிக் கிடந்துள்ளார். முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரும் வழியில் ராதாகிருஷ்ணன் இறந்தார்.
இதையறிந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், விவசாய சங்கத்தினர் மற்றும் இறந்த விவசாயியின் உறவினர்கள் முசிறி கைகாட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, விவசாயி தற்கொலைக்கு காரணமான வங்கி மேலாளர், கூட்டுறவு பால் உற்பத்தி சங்கத் தலைவர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முசிறி காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்வம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வரும் திங்கள்கிழமை வங்கிக்குச் சென்று முறையாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com