பட்டாசு ஆலையில் வெடி விபத்து 2 தொழிலாளர்கள் சாவு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில், 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
பட்டாசு ஆலையில் வெடித்து தரைமட்டமான பகுதியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத் துறையினர்.
பட்டாசு ஆலையில் வெடித்து தரைமட்டமான பகுதியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத் துறையினர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில், 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒரு பெண் காயமடைந்தார். சடலம் ஏற்றப்பட்ட வாகனத்தின் முன்பு உறவினர்கள் நிதியுதவி கோரி மறியலில் ஈடுபட்டனர்.
சாத்தூர் அருகே உள்ள கீழச்செல்லையாபுரத்தைச் சேர்ந்தவர் சுஜாதா. இவருக்குச் சொந்தமான பட்டாசுத் தொழிற்சாலை அன்பின்நகரம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 30-க்கும் மேற்பட்ட அறைகளில், நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சனிக்கிழமை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்றுள்ளது. ஒரு அறையில் வல்லம்பட்டியைச் சேர்ந்த சேகர் (45), நடுச்சூரன்குடியைச் சேர்ந்த கணேசன் (45) ஆகியோர், சால்சா வெடிக்கான மருந்து செலுத்தும்போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக, வெடித்துச் சிதறி விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, அருகில் பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அலறியடித்து வெளியே ஒடிவிட்டனர். தகவலறிந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், சேகர் மற்றும் கணேசன் ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
மேலும், அன்பின்நகரத்தைச் சேர்ந்த மரியம்மாள் காயமடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த வெடி விபத்தில் ஒரு அறை முழுவதும் தரைமட்டமானது. விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் மற்றும் சாத்தூர் துணைகண்காணிப்பாளர் குமார் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.
சடலங்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் போலீஸார் ஏற்றினர். அப்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி கேட்டு உறவினர்கள் அந்த வாகனம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பட்டாசு தொழிற்சாலையின் சார்பில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், இறுதிச் சடங்கு செலவிற்கு தலா ரூ50 ஆயிரமும் வழங்கபட்டது. இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
பின்னர், இறந்தவர்களின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து பட்டாசு தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளி பிச்சைகனி அளித்த புகாரின் பேரில் ஏழாயிரம்பண்ணை போலீஸார் வழக்குப்பதிவு செய்து தொழிற்சாலை உரிமையாளர் சுஜாதா மற்றும் போர்மென் சமுத்திரகனி ஆகியோரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com