பண்பாட்டு போராட்டத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் தமிழ் மொழி

பண்பாட்டு போராட்டத்தை தாங்கிப் பிடித்திருக்கும் சிறப்பு பெற்றது தமிழ் மொழி என குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் பேசினார்.
சேலத்தில் 43-ஆம் ஆண்டு கம்பன் விழாவைத் தொடக்கி வைத்துப் பேசுகிறார் குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார்.
சேலத்தில் 43-ஆம் ஆண்டு கம்பன் விழாவைத் தொடக்கி வைத்துப் பேசுகிறார் குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார்.

பண்பாட்டு போராட்டத்தை தாங்கிப் பிடித்திருக்கும் சிறப்பு பெற்றது தமிழ் மொழி என குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் பேசினார்.
சேலம் கம்பன் கழகத்தின் 43 -ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை தொடங்கியது. இதில் கம்பன் கழகத் தலைவர் ஆர்.பி.சாரதி வரவேற்றுப் பேசினார். சென்னை பொதிகை தொலைக்காட்சி நிலையத்தின் இயக்குநர் பால ரமணி தலைமை வகித்துப் பேசினார்.
விழாவைத் தொடக்கி வைத்து குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் பேசியது:
இன்றையச் சூழலில் நாம் எல்லோரும் சிந்தித்துச் செயல்பட வேண்டிய தருணத்தில் உள்ளோம். வாழ்க்கை என்பது மெல்லிய நீரோட்டம் அல்ல. வாழ்க்கையில் புயலையும், நெருப்பையும் சந்தித்தாக வேண்டும். அதே நேரத்தில், காட்டாற்று வெள்ளத்தையும் சந்திக்க நேரிடும்.
வாழ்க்கைக்கு இலக்கியம் பேசிய மொழி நமது தொன்மையான தமிழ் மொழி ஆகும். பண்பாட்டுப் போராட்டத்தைத் தாங்கிப் பிடித்திருப்பது தமிழ் மொழி ஆகும். இலக்கிய உலகத்தில் நீண்ட நெடிய வளர்ச்சி உள்ளது. மன்னர் காலம் தொட்டு தற்போதைய தலைமுறையில் இணையத்தில் தவழும் மொழியாகத் தமிழ் உள்ளது.
இன்றைய இளைஞர்கள் கணினியில் மூழ்கிக் கிடக்கின்றனர். தோல்வியே வெற்றியாகி விடும் என்பது இளைஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வரலாற்றைத் தான் இளைஞர்கள் அறிய வேண்டும். வாழ்க்கையை அறம் வழிநடத்திட வேண்டும் என்பதை கம்ப ராமாயணம் மூலம் நாம் அறியலாம்.
ராமாயணத்தில் மன்னர் பொறுப்பை ஏற்காமல் ராமன் வனவாசம் சென்றான். பரதன் அந்தப் பதவியை ஏற்றான். பதவியை வேண்டாம் என்று சொன்ன பரதன் ஆயிரம் ராமனுக்குச் சமம் எனலாம்.
தற்போதைய சூழலில் அன்பின் வேர் ஆட்டம் கண்டுள்ளது என்பதை இளைஞர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.
விழாவில், சண்முகா மருத்துவமனை இயக்குநர் எஸ்.பன்னீர்செல்வம் வாழ்த்துரை வழங்கினார். கம்பன் கழகச் செயலர் கரு.வெ.சுசீந்திரகுமார் நன்றி கூறினார். கம்பன் கழக நிர்வாகிகள் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், ஏ.பி.சுதர்சனம், ஏ.பி.சுகந்தி சுதர்சனம், ஆர்.பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இன்று நிறைவு: கம்பன் கழகத்தின் 43-ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது. காலை 10 மணிக்கு கற்பனை கற்போம் நிகழ்ச்சியும், தொடர்ந்து, 11 மணிக்கு திரைப்படப் பாடலாசிரியர் பிறைசூடன் பங்கேற்கும் கவிச்சோலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதில் கவிஞர்கள் கங்கை மணிமாறன், ஆண்டாள் பிரியதர்ஷினி, பே.செ.சுந்தரம், கீரை பிரபாகரன் ஆகியோர் பேசுகின்றனர்.
மாலை 4.25 மணிக்கு கி.சிவக்குமார் பங்கேற்கும் வேதக்கடல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு சுகி சிவம் நடுவராகப் பங்கேற்கும் கற்போர் நெஞ்சில் பெரிதும் நிற்பது ராமனின் அறமா, சீதையின் அறமா என்ற சிறப்புப் பட்டிமன்றமும் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com