மதங்களைக் கடந்த மனிதநேயம்: வெளிநாட்டில் உயிரிழந்த தொழிலாளி சடலத்தை பெற்றுத் தந்த மமகவினர்

வெளிநாட்டில் உயிரிழந்த கடலூர் தொழிலாளியின் சடலத்தை மனிதநேய மக்கள் கட்சியினர் மீட்டு அவரது குடும்பத்தினரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனர்.
தொழிலாளி அரிகிருஷ்ணன் சடலத்தை கடலூரில் அவரது  குடும்பத்தினரிடம் ஒப்படைத்த தமுமுக, மமகவினர்.
தொழிலாளி அரிகிருஷ்ணன் சடலத்தை கடலூரில் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்த தமுமுக, மமகவினர்.

வெளிநாட்டில் உயிரிழந்த கடலூர் தொழிலாளியின் சடலத்தை மனிதநேய மக்கள் கட்சியினர் மீட்டு அவரது குடும்பத்தினரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனர்.
கடலூர், மஞ்சக்குப்பம் குண்டு உப்பலவாடி பகுதியைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (47). கார் மெக்கானிக். இவர் கடந்த 9 வருடங்களாக சவுதி அரேபியா நாட்டின் ரியாத் நகரில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், கடந்த 45 நாள்களுக்கு முன்பு அவர் பணியாற்றிய நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.
அரிகிருஷ்ணன் குடும்பத்தினரின் ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டு, அவரது சடலத்தை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் கடலூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் ஈடுபட்டனர். இதையடுத்து, இந்திய தூதரக ஒத்துழைப்புடன் அரிகிருஷ்ணனின் சடலம் சனிக்கிழமை விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கிருந்து, தமுமுக ஆம்புலன்ஸில் கடலூருக்கு சடலம் கொண்டு வரப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
உயிரிழந்த அரிகிருஷ்ணனுக்கு அருள்ஜோதி (38) என்ற மனைவியும், சுப்புலட்சுமி (17), சதன் (15) ஆகிய குழந்தைகளும் உள்ளனர்.
அரிகிருஷ்ணனின் சடலத்தைக் கொண்டுவந்ததற்கான ரூ.2.50 லட்சம் செலவுத் தொகை மற்றும் அவரது குழந்தைகளின் கல்விச் செலவையும் தமுமுக, மமக ஏற்கும் என மமக வடக்கு மாவட்டச் செயலர் வி.எம்.ஷேக்தாவூத் அறிவித்தார். அந்தக் கட்சியினரின் மதங்களைக் கடந்த மனிதநேய உதவிக்கு அரிகிருஷ்ணன் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
ஏற்பாடுகளை, கட்சி நிர்வாகிகள் கே.அப்துல் ரஹிம், எம்.எஸ்.ஜாபர்அலி, ஏ.எஸ்.பஷிர் அஹமது, எல்.யூசுப், தவக்கல் ராஜா, தமாம்.அஸ்ரப் அலி, ஏ.அஸ்ரப் அலி உள்ளிட்டோர் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com