ஆட்சியைக் கலைக்க நினைக்கிறார்கள்: அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா

அதிமுக ஆட்சியைக் கலைத்துவிடலாம், அதிமுக இயக்கத்தை அழத்துவிடலாம் என சிலர் நினைக்கின்றனர்.
ஆட்சியைக் கலைக்க நினைக்கிறார்கள்: அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா

அதிமுக ஆட்சியைக் கலைத்துவிடலாம், அதிமுக இயக்கத்தை அழத்துவிடலாம் என சிலர் நினைக்கின்றனர். அவர்கள் கனவு பலிக்காது. உயிரைக் கொடுத்தாவது கட்சியைக் காப்பேன் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் வி.கே.சசிகலா உறுதிபட தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூரில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா பேசியதாவது:-
எம்.ஜி.ஆருக்குப் பிறகு, ஜெயலலிதா ஒரு தாயாக இருந்து இந்தக் கட்சியை கட்டிக் காத்து வந்தார். நீங்கள் எல்லோரும் சேர்ந்து என்னை இந்த இயக்கத்தை நடத்த அழைப்பு விடுத்தீர்கள். அதை ஏற்று நானும் இந்த இயக்கத்தை நடத்த முன்வந்தேன். ஆனால், இந்த இயக்கம் வளர்ந்து விடுமோ எந்த அச்சத்தில் நம் எதிரிகள் வலை பின்னுகிறார்கள்
ஒன்று உறுதியாகத் தெரிகிறது. அதிமுக ஆட்சியை எப்படியாவது கலைத்து விடலாம் என நினைத்து சில எட்டப்பர்கள் உருவாகியிருக்கிறார்கள். அவர்களை வைத்து இந்தக் காரியத்தை செய்து விடலாம் என நினைக்கிறார்கள். 129 எம்.எல்.ஏ.க்கள் என்பக்கம்தான் உள்ளனர். ஆட்சியமைப்பதை யாராலும் தடுப்பணை போட்டு தடுக்க முடியாது. ஆட்சியையும், கட்சியையும் யாராலும் அசைக்க முடியாது.
மறைந்த ஜெயலலிதா இந்த ஆட்சியைக் கொடுத்தார்கள். அந்த ஆட்சி மக்களுக்கு நன்மையை செய்யக் கூடிய ஆட்சி. அர்ப்பணிப்பு உணர்வுடன் திட்டங்களை நிறைவேற்றி மக்களின் அன்பைப் பெற வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டப் பேரவைத் தேர்தலில் மூன்றாவது முறையாகவும் அதிமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டும். இப்படிச் சொல்லும் அளவுக்கு நமது உழைப்பு இருக்க வேண்டும்.
ஆட்சிக்கு வந்ததும் தற்போது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளை ஒவ்வொருவரும் தொகுதிக்குச்சென்று மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றியைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பணியாற்ற வேண்டும். கழகத்துக்கு ஒரு பிரச்னை என்று வந்தால் என் உயிரைக் கொடுத்து காப்பாற்றுவேன்.
கட்சியையும், ஆட்சியையும் நிலைநாட்ட எந்த நேரத்தில் எந்த முடிவு எடுக்க வேண்டுமோ தெளிவாக எடுப்பேன். கலங்க மாட்டேன். ஜெயலலிதாவும் சரி, நானும் சரி, சென்னை சிறையையும், பெங்களூர் சிறையையும் பார்த்து, அதிலிருந்து மீண்டு வந்து ஆட்சியையும் பிடித்துள்ளோம்.
பெண் தானே... பயமுறுத்தி பார்த்து விடலாம் என நினைத்தால், ஜெயலலிதாவிடம் எப்படி முடியாதோ அதுபோன்று என்னிடமும் முடியாது.
ஆட்சி அமைக்கும் நேரம் வந்தவுடன் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் உறுதிமொழி எடுத்து அமைச்சர்கள், 129 எம்.எல்.ஏ.க்களுடன் கோட்டைக்குச் செல்ல வேண்டும் என்று சபதம் எடுத்துள்ளேன் என்றார் சசிகலா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com