திருவண்ணாமலையில் அதிமுக முன்னாள் நகரச் செயலர் வெட்டிக் கொலை

திருவண்ணாமலையில் அதிமுக முன்னாள் நகரச் செயலர் வி.கனகராஜ் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக திமுக பிரமுகர் உள்பட மூவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலையில் அதிமுக முன்னாள் நகரச் செயலர் வெட்டிக் கொலை

திருவண்ணாமலையில் அதிமுக முன்னாள் நகரச் செயலர் வி.கனகராஜ் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக திமுக பிரமுகர் உள்பட மூவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை சன்னதி தெருவைச் சேர்ந்தவர் வி.கனகராஜ் (51). இவர் அதிமுகவின் நகரச் செயலராக 18 ஆண்டுகளாக இருந்து வந்தார். தற்போது, திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராகச் செயல்பட்டு வந்தார்.
இவர் ஞாயிற்றுக்கிழமை காலையில் இறகுப் பந்து விளையாட திருவண்ணாமலை 5-ஆவது புது வாணியங்குளத் தெருவைச் சேர்ந்த தனது நண்பரான கண்ணதாசனுடன் (43) இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டார்.
திருவண்ணாமலை நகர காவல் நிலையம் வழியாக, ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலின் திருமஞ்சன கோபுரம் எதிரே சென்றபோது, பின்னால் வந்த கார் இரு சக்கர வாகனம் மீது லேசாக உரசியது.
இதில் நிலை தடுமாறிய கனகராஜ், கண்ணதாசன் ஆகியோர் கீழே விழுந்தனர். உடனே, காரில் இருந்து இறங்கிய இருவர், பின்னால் பைக்கில் வந்த ஒருவர் என மூவரும் சேர்ந்து கனகராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். தடுக்க முயன்ற கண்ணதாசனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த கனகராஜ், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட கண்ணதாசன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
மூவரும், கொலை நிகழ்ந்த இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள நகர காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்தனர்.இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். அடுத்த சில நிமிடங்களில் ஏராளமானோர் சம்பவ இடத்தில் திரண்டனர். அவரது மனைவி ஞானசெளந்தரி உள்பட உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
கொலையாளிகள் மூவர் கைது: இதற்கிடையே, மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள், திருவண்ணாமலை, பழைய கார்கானா தெருவைச் சேர்ந்த சரவணன் (27), காந்தி நகர் 2-ஆவது தெருவைச் சேர்ந்த பங்க் பாபு (44), பழைய கார்கானா தெருவைச் சேர்ந்த ராஜா (31) என்பது தெரிய வந்தது. இவர்களில் பாபு, திமுகவின் அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணைத் தலைவராக இருந்து வருவதும் தெரியவந்தது.
கார், பைக் பறிமுதல்: மேலும், கொலையாளிகள் பயன்படுத்திய கார், பைக், 2 அரிவாள்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்ததுடன், சடலத்தைக் கைப்பற்றி, பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ரூ.1.90 கோடி பணத்துக்காக கொலை: மூவரில் பாபுவும், கனகராஜும் நண்பர்கள். காந்தி நகரில் கனகராஜும், அவரது அண்ணனும் சேர்ந்து தங்கும் விடுதி ஒன்றைக் கட்டினராம். இதற்காக, பாபுவிடம் இருந்து ஒரு கோடியே 90 லட்சம் ரூபாயை கனகராஜ் கடனாக வாங்கியிருந்தாராம்.
பணத்தை நீண்ட நாள்களாகியும் கனகராஜ் திருப்பித் தரவில்லையாம். எனவே, தங்கும் விடுதியையாவது தனது பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறு அண்மையில் பாபு கேட்டாராம். இதற்கும் கனகராஜ் மறுத்தாராம். இதனால் ஆத்திரமடைந்த பாபு, கனகராஜை தனது நண்பர்களுடன் சேர்ந்து கொன்றது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அருணாசலேஸ்வரர் கோயில் திருமஞ்சன கோபுர நுழைவு வாயிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் கொலைச் சம்பவம் முழுவதும் பதிவாகி உள்ளது.
டிஐஜி விசாரணை: வேலூர் சரக டிஐஜி தமிழ்ச்சந்திரன், மாவட்ட எஸ்.பி. இரா.பொன்னி ஆகியோர் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டனர். கனகராஜின் சடலம் திங்கள்கிழமை பிற்பகல் அடக்கம் செய்யப்படுகிறது.
இதற்கிடையே, பலத்த காயமடைந்த கனகராஜின் நண்பர் கண்ணதாசன், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com