நிலத்தடி நீரை காப்பாற்ற சீமைக் கருவேல மரங்கள் அழிக்கப்படுமா

வேலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து நிலத்தடி நீரை உறிஞ்சி வறட்சிக்கு காரணமான சீமைக் கருவேல மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து நிலத்தடி நீரை உறிஞ்சி வறட்சிக்கு காரணமான சீமைக் கருவேல மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விவசாயத்துக்கு மிகவும் ஆபத்தானதாக சீமைக் கருவேல மரங்கள் விளங்குகின்றன. தமிழகத்தில் 10 ச.மீ.க்கு ஒரு மரம் என்றிருந்த கருவேல மரங்கள் தற்போது 4 ச.மீ.க்கு ஒரு மரமாக அதிகரித்துவிட்டன. இதனால் ஆண்டுக்கு 2.5 சதவீதம் விவசாய சாகுபடி பரப்பு குறைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இந்த மரங்கள் புற்றீசல் போல் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. வண்டல், களிமண்ணில் உள்ள கால்சியம் மற்றும் நீர் ஆதாரத்தை நிலைத்து வைத்திருக்கும் தன்மை இந்த மரங்களுடைய விதை பெருக்கத்துக்கு ஏதுவாக அமைந்து விடுகிறது. டெல்டா அல்லாத பிற மாவட்டங்களில் இந்த மரங்கள் வேலி பயிராக மட்டுமே விவசாயிகளால் தொடக்க காலத்தில் வளர்க்கப்பட்டன.
கடந்த 5 ஆண்டுகளாக போதிய மழையில்லாத காரணத்தால் தற்போது இந்த மரங்கள் வேலிகளைத் தாண்டி வயல்வெளிகளிலும் பரவிவிட்டன. தமிழகத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் குறைந்தபட்சம் 10 ஏக்கர் பரப்பு நிலத்தையாவது இந்த மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. டெல்டா மாவட்டங்களில் 50 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 300 முதல் 600 ஊராட்சிகள் வரை உள்ளன.
மொத்தமாகக் கணக்கிடும்போது, தமிழகத்தில் 10 ச.மீ.க்கு ஒரு மரம் என இருந்த கருவேல மரம் தற்போது 4 ச.மீ.க்கு ஒரு மரமாக அதிகரித்துவிட்டதால், டெல்டா மாவட்டங்களில் ஆண்டுக்கு 1.75 முதல் 2.5 சதவீதம் சாகுபடி பரப்பு குறைகிறது. மற்ற மாவட்டங்களில் 0.9 முதல் 1.2 சதவீதம் சாகுபடி பரப்பு குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த கருவேல மரம் ஆணி வேர் கொண்டவை. இதன் வேர்களுடைய உள் அமைப்பு பல அடுக்குகளைக் கொண்டது. வறட்சியை தாங்கி வளர்ந்து, வேர்கள் உயிருடன் நிலைத்து இருக்கும் தன்மை கொண்டவை. பிற தாவரங்களுக்கு வேலி பயிராக இந்த மரங்களை வைத்திருந்தால், அந்த செடிகளுக்கு அளிக்கக்கூடிய தண்ணீரை 35 முதல் 45 சதவீதம் உறிஞ்சிக் கொள்கின்றன. அதனால், வேலி பயிராகக்கூட இந்த மரங்களை வளர்க்கக் கூடாது.
கருவேல மரங்களின் இலை, காய், விதை போன்றவை எந்த உயிரினத்துக்கும் பயன்படாதவை. இம்மரத்தின் நிழலில் கட்டி வைக்கப்படும் கால்நடைகள் மலடாக மாறும் என்பது அண்மையில் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவற்றின் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றும் தன்மை கொண்டது. அதே நேரத்தில் இவை முளைத்துள்ள பகுதியில் வேறு செடிகள் வளர முடியாது. இவற்றின் விஷத்தன்மை அறிந்தே, இதன் மீது எந்த பறவையும் கூடு கட்டுவது இல்லை.
கருவேல மரங்கள் ஆக்சிஜனை மிகக் குறைந்த அளவே உற்பத்தி செய்கின்றன. அதே நேரத்தில் கரியமிலவாயுவை அதிக அளவில் உற்பத்தி செய்து விடுகிறது. இவை அனைத்தும் அறிவியல் ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 10 ஆண்டுகளில் இந்த மரங்களின் எண்ணிக்கை இருமடங்கு அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
நிலத்தடி நீரை பாழாக்கிவரும் கருவேல மரங்கள் சுற்றுப்புற பகுதிகளில் காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் அப்பகுதியில் வறட்சி என்பது தவிர்க்க முடியாதது. இதை அறியாமல் கருவேல மரங்களை நாமே வளர்த்து வருகிறோம்.
கருவேல மரங்களை அழிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளில் உள்ள கருவேல மரங்களை அழிக்க அரசு முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் நிலங்களில் உள்ள கருவேல மரங்களை அதன் உரிமையாளர்களே அழிக்க வேண்டும்.
வேலூர் மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. வேலூருக்கு மேட்டூர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது மேட்டூரிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால், மாவட்டத்தில் விரைவில் குடிநீர் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் வறட்சி காரணமாக நிலத்தடி நீர் வறண்டு போய் பொது பயன்பாட்டுக்கான தண்ணீர் கிடைப்பது அரிதாக உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் மாவட்டத்தில் பரவி வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தந்த பகுதி தன்னார்வத் தொண்டு அமைப்புகளின் உதவியுடனும் அதனை அழிக்கலாம். தற்போது நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள 2017-18-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு ரூ. 48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களை சீமை கருவேல மரங்களை அழிக்கும் பணிக்கு பயன்படுத்தி அதனை முற்றிலுமாக ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com