உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆளுநர் மாளிகை முற்றுகை

தமிழ்நாட்டில் நிலவும் அசாதாரண சூழலை போக்கும் வகையில் ஓரிரு நாள்களில் உரிய முடிவெடுத்து மாற்று ஆட்சி அமைய நடவடிக்கை எடுக்கவில்லையெனில், ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப்
உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆளுநர் மாளிகை முற்றுகை

தமிழ்நாட்டில் நிலவும் அசாதாரண சூழலை போக்கும் வகையில் ஓரிரு நாள்களில் உரிய முடிவெடுத்து மாற்று ஆட்சி அமைய நடவடிக்கை எடுக்கவில்லையெனில், ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப் போவதாக இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலர் எம்.ஜி.கே. நிஜாமுதீன் கூறினார்.
நாகூரில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
தமிழ்நாட்டில் பெரிய அளவில் சட்டக் குழப்பங்கள் ஏற்படவில்லை. முதல்வர் தனது ராஜிநாமா கடிதத்தை தெளிவாக கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து, சசிகலா சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்துள்ளார்.
எனவே ஆளுநர், முதல்வரின் ராஜிநாமா கடிதத்தின் மீது நடவடிக்கை எடுத்து, உடனடியாக மாற்று முதல்வருக்கான வாய்ப்பை வழங்கியிருக்க வேண்டும். மாறாக தொடர்ந்து காலம் தாழ்த்துவதால் தமிழ்நாட்டில் அசாதாராண சூழல் ஏற்பட்டு, எம்.எல்.ஏ.க்களை குதிரை பேரத்தின் மூலம் விலைக்கு வாங்கக்கூடிய நிலை உருவாக ஆளுநர் காரணமாகி விட்டார். ஆளுநரின் செயல்பாடு பாஜக கட்சிக்கு ஆதரவாக உள்ளது. இது இந்திய ஜனநாயகத்துக்கும், மக்களுக்கும் விரோதமான செயலாகும். இதை இந்திய தேசிய லீக் வன்மையாகக் கண்டிக்கிறது.
உடனடியாக சசிகலாவின் கடிதத்தை ஏற்று, அவரை ஆட்சியமைக்க அனுமதிக்க வேண்டும். சட்டப்பேரவையில் பலத்தை நிரூபிக்க கேட்கும்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் வந்துதான் ஆக வேண்டும். அவர்களை மறைத்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை. சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிர்பந்திக்கபட்டிருக்கிறார்கள் என்ற கருத்து உண்மையெனில் அப்போது தெரிய வரும்.
தமிழ்நாட்டில் இன்னமும் நிரந்தர ஆளுநர் நியமிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் நிலையற்ற தன்மையை உருவாக்க பாஜக அரசு திட்டமிட்டு குழப்ப நிலையை உருவாக்கியுள்ளது. எனவே ஓரிரு நாள்களில் உரிய முடிவெடுத்து மாற்று ஆட்சி அமைய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com