எம்எல்ஏக்கள் சிறைவைக்கப்படவில்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர், பூந்தண்டலம் விடுதிகளில் தங்கியுள்ள அதிமுகவின் 119 எம்எல்ஏக்களும் தங்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில், சுதந்திரமாகவும்,

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர், பூந்தண்டலம் விடுதிகளில் தங்கியுள்ள அதிமுகவின் 119 எம்எல்ஏக்களும் தங்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில், சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
எம்எல்ஏக்கள் ஆர்.டி.ராமசந்திரன் (குன்னம்), எம்.கீதா (கிருஷ்ணராயபுரம்) ஆகியோரை மீட்டு நேரில் ஆஜர்படுத்தக் கோரி, வாக்காளர்கள் எம்.ஆர்.இளவரசன், வி.ப்ரீத்தா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். மேலும், எம்எல்ஏக்களை அவர்களது குடும்பத்தினர்கூட பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, சுதந்திரமாக நடமாடும் அடிப்படை உரிமையும் பறிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் இருவரும் குறிப்பிட்டிருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், டி.மதிவாணன் ஆகியோர் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.முத்தரசி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறியிருந்ததாவது:- கூவாத்தூர் "கோல்டன் பே ரிசார்ட்', பூந்தண்டலம் வில்லேஜ் ரீட்டிரீட் ரிசார்ட் ஆகிய இரு விடுதிகளில் ஏடிஎஸ்பி, 4 ஆய்வாளர்கள், மாமல்லபுரம் டிஎஸ்பி, 2 வட்டாட்சியர்கள், 4 உதவி ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர். கூவத்தூரில் இருந்த 100 எம்எல்ஏக்களுடன், பூந்தண்டலம் விடுதியில் 19 எம்எல்ஏக்களிடமும், விடுதி ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, எம்எல்ஏக்களை நன்றாக கவனித்து, தேவையானவற்றைச் செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.
கூவத்தூர் விடுதியில் தங்கியுள்ள ஆர்.டி.ராமசந்திரன், தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே தங்கியிருக்கிறார். தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையிலும், எந்தவித பயமுமின்றி பல்வேறு காரணங்களுக்காக விடுதியில் தங்கியிருப்பதாகவும், யாரும் தங்களை சிறை வைக்கவில்லை என்று அமைச்சர்கள் உள்பட எம்எல்ஏக்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். மேலும், அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளனர். ஆகையால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது, எம்.ஆர்.இளவரசன் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கே.பாலு, "முன்னுக்குப் பின் முரணாக அரசின் பதில் உள்ளது. தனியார் விடுதியைச் சுற்றி ஆயிரத்துக்கு மேற்பட்ட ரௌடிகள், குண்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் பொதுமக்கள், பத்திரிகையாளர்களை அச்சுறுத்தி தாக்கி வருகின்றனர்' என்றார்.
இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com