ஏன் அன்றே முதல்வராகவில்லை? வி.கே.சசிகலா விளக்கம்

நான் நினைத்திருந்தால் அன்றே முதல்வராகியிருப்பேன். துக்கத்தில் இருந்ததால் முதல்வர் பதவி பெரிதாகத் தெரியவில்லை என்று அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலா கூறினார்.
சென்னை போயஸ் தோட்டத்தில் அதிமுக தொண்டர்களிடையே பேசிய பொதுச் செயலர் வி.கே.சசிகலா.
சென்னை போயஸ் தோட்டத்தில் அதிமுக தொண்டர்களிடையே பேசிய பொதுச் செயலர் வி.கே.சசிகலா.

நான் நினைத்திருந்தால் அன்றே முதல்வராகியிருப்பேன். துக்கத்தில் இருந்ததால் முதல்வர் பதவி பெரிதாகத் தெரியவில்லை என்று அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலா கூறினார்.
மேலும், ஓ.பன்னீர்செல்வத்தைப் போன்று, ஆயிரம் பன்னீர்செல்வங்களைப் பார்த்து விட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் திங்கள்கிழமை காலை திரண்டிருந்த அதிமுகவினரிடையே வி.கே.சசிகலா பேசியதாவது:
அதிமுகவுக்கு பலப்பரீட்சை ஏற்பட்டுள்ளது. இது பழக்கப்பட்ட ஒன்றுதான். எம்.ஜி.ஆர். இறந்தபோது, இதே சூழ்நிலையில் கட்சி இரண்டாகப் பிரிந்தபோது அதனை ஒன்றாக இணைத்து "இரட்டை இலை' சின்னத்தை மீட்டார் ஜெயலலிதா. ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட கட்சியை ஒரு பன்னீர்செல்வத்தால் ஒன்றும் செய்துவிட முடியாது.
பிரித்தாள நினைக்கிறார் பன்னீர்செல்வம்: எந்த தனி மனிதனாலும் கட்சியைப் பிரித்து விட முடியாது. பதவியும், பரிசும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு யாரால் வந்தது? பெரியகுளத்தில் இருந்த சாதாரண மனிதரை ஜெயலலிதாதான் இன்று ஒரு மனிதனாக உருவாக்கினார். இந்தக் கட்சியை நன்றி இல்லாமல் பிரித்தாள நினைக்கிறார். கட்சிக்கு விசுவாசமாக இருந்தவர் அல்ல என்பதைக் காட்டி விட்டார்.
முதல்வராகப் பதவியேற்குமாறு கூறினேன்: முதல்வர் ஜெயலலிதா இறந்தபோது, இறுதிச் சடங்களை எப்படிச் செய்வது என்பதைப் பார்த்துக் கொண்டேன். ஜெயலலிதா இல்லாத நிலையில் கட்சியை இரண்டு துண்டாகப் பிரிக்க நிறைய பேர் சதி திட்டத்தில் இருந்தனர். இது அன்று இரவு 12 மணிக்கே தெரிந்து விட்டது.
உடனடியாக அழுது கொண்டே ஓ.பன்னீர்செல்வம் உள்பட 5 அமைச்சர்களைக் கூப்பிட்டு, "நமக்கு நேரம் இல்லை. உடனடியாக இரவே பதவியேற்க வேண்டும் உடனே ஆளுநரிடம் நேரம் கேளுங்கள், இந்த நிமிஷமே பதவியேற்க வேண்டும். எந்தத் துறையை யார் பார்த்துக் கொண்டார்களோ அது அப்படியே இருக்கட்டும். பன்னீர்செல்வம் முதல்வராக இருக்கட்டும்' என்றேன்.
துக்கத்தில் முதல்வர் பதவியை விரும்பவில்லை: அப்போது, "கட்சியினர் விரும்புவதால், நீங்களே (சசிகலா) பதவியேற்க வேண்டும் என 5 பேரும் சொன்னார்கள். அனைத்தையும் விட அக்காவே (ஜெயலலிதா) முக்கியம். அவர்களின் உடல் அருகே இருந்தாக வேண்டும். பதவிக்கு ஆசைப்பட்டது இல்லை. தேவையெனில் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறி பதவியேற்பை உடனே செய்ய வைத்தேன். இறுதிஅஞ்சலி நிகழ்ச்சியிலும் பங்கேற்றேன்.
அப்போதிருந்த துக்கத்தில் முதல்வர் பதவி பெரிதாகத் தெரியவில்லை. இதனை உண்மையான தொண்டர்களிடம் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் சொன்னேன்.
துரைமுருகனுக்கு பதிலடி தரவில்லை: அப்போதே நினைத்திருந்தால் முதல்வராகி இருக்கலாம். அந்த நினைப்பு ஒரு நிமிஷம்கூட வரவில்லை. ஆனால், ஜெயலலிதா கொண்டு வந்த அரசு நீடிக்க வேண்டும். சட்டப் பேரவை நிகழ்ச்சியைப் பார்த்தபோது, மனது சரியில்லை. எம்.ஜி.ஆரை விரட்டி அடித்த திமுகவினரிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறாரே? இது எப்படி சரியாக வரும்.
இதையே குற்றச்சாட்டாக அமைச்சர்களும் சொன்னார்கள். எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகனோ, "திமுகவில் எம்.எல்.ஏ.க்கள் 89 பேர் இருக்கின்றோம். முதல்வராக பன்னீர்செல்வம் தொடர்ந்து இருக்கலாம். திமுக ஆதரவு இருக்கும்' என்றார். ஆனால், இதற்கு பன்னீர்செல்வம் எந்தப் பதிலையும் சொல்லவில்லை. "எதற்காக திமுக ஆதரவு கொடுக்க வேண்டும்? அதிமுகவுக்கு இவ்வளவு பேர் இருக்கிறார்களே என்று சொல்லியிருக்க வேண்டும். அப்படி பன்னீர்செல்வம் பேசியிருந்தால் நான் விட்டிருப்பேன். அதை அவர் சொல்லவில்லை.
கட்சியிலிருந்து முடிந்தால் உறுப்பினர்களைப் பிரித்துக் கொண்டு வா என்று சூசகமாகக் குறிப்பிட்டதை புரிந்து கொண்டதால், இந்த முடிவுக்கு வந்தோம். இந்த நிலைமைக்கு தள்ளியது பன்னீர்செல்வம்தான்.
"1,000 பன்னீர்செல்வங்களை'...: 33 ஆண்டுகளாக போராட்டங்களை நிறைய சந்தித்து வந்துள்ளோம். அதனால் போராட்டங்கள் கையில் உள்ள தூசு மாதிரி. இதுமாதிரி நாங்கள் ஆயிரம் பன்னீர்செல்வங்களைப் பார்த்து விட்டுத்தான் வந்துள்ளோம். இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.
சாதித்துக் காட்டுவேன்: 33 ஆண்டுகளாக 2 பெண்கள் சேர்ந்து அதிமுகவை நடத்தியுள்ளோம். எப்படிச் செயல்படுவோம் என்பது எங்களுக்குத் தெரியும். சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று விடாது. ஆட்சி அமைப்போம். சட்டப் பேரவையில் ஜெயலலிதாவின் படத்தைத் திறப்போம் என உறுதிமொழியை எடுத்துள்ளோம். உறுதியாக அதிமுக ஆட்சியை அமைக்கும்.
எத்தனை ஆண்கள் எதிர்க்கட்சியில் இருந்து வந்தாலும், பெண்ணாகிய நான் சாதித்துக் காட்டுவேன். ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் வரை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது என்றார் சசிகலா.

ஜெயலலிதாவை ஊக்கப்படுத்தினேன்
எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதாவை அரசியலுக்கு வர ஊக்கப்படுத்தினேன் என்று வி.கே.சசிகலா கூறினார்.
போயஸ் தோட்ட இல்லத்தில் தொண்டர்களிடையே அவர் பேசியதாவது:-
எம்ஜிஆர். இறந்தபோது, அவரது உடல் அருகே ஜெயலலிதாவை நிற்க அனுமதிக்காமல், வீட்டுக்குள் எடுத்துச் சென்றார்கள். பின்னர், கதவை சாத்திக் கொண்டார்கள். இதன்பின்னர் ராணுவ வண்டியில் ஏற்ற உடலை எடுத்துச் சென்றார்கள். அப்போது அங்கே நின்ற ராணுவ வீரர், "நீங்கள் வாருங்கள், ராணுவ வண்டியில் ஏறுங்கள்' என்றார்.
உடனே ராணுவ வண்டியில் ஜெயலலிதா ஏறியபோது, நானும் உடன் சென்றேன். ராணுவ வண்டியில் ஏற முற்பட்டபோது, அங்கிருந்த ஜானகி அம்மாளின் உறவினர்கள் பிடித்துத் தள்ளினர்.
அப்போது காவல் ஆணையர் ஸ்ரீபால், "ஜெயலலிதாவைத் தாக்க அமைச்சர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். உடனே அவரை அழைத்துச் செல்லுங்கள்' என்றார். உடனே ஜெயலலிதாவை போயஸ் தோட்ட இல்லத்துக்கு அழைத்து வந்தேன்.
அப்போது, "அவமானப்படுத்தி விட்டார்கள். இனிமேல் கட்சி வேண்டாம். இது தேவை இல்லை. இதுவரை எம்ஜிஆருக்கு உதவியாக இருந்தேன். என்னை விட்டுவிடுங்கள்' என்று ஜெயலலிதா கூறினார்.
ஜெயலலிதாவிடம் கெஞ்சி கூத்தாடினேன். அரசியலுக்கு வர ஊக்கப்படுத்தினேன். இதன் பின், கட்சியை நடத்தினோம். கட்சியினரிடம் இருந்து ஏராளமான மனுக்கள் வரும். அந்த மனுக்களை மணிக்கணக்கில் படிப்பேன். அதில் முக்கியமானவற்றை ஜெயலலிதாவிடம் கொடுத்து உடனே அதனை செய்ய வேண்டும் என்பேன். எந்த பிரச்னை என்றாலும் அவரிடம் சொல்வேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com