குமாரசாமி தீர்ப்பில் கணிதப் பிழை: சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம்!

கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் கணிதப் பிழை உள்ளதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குமாரசாமி தீர்ப்பில் கணிதப் பிழை: சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம்!


புது தில்லி: கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் கணிதப் பிழை உள்ளதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். (உச்சநீதிமன்றத்தீர்ப்பு)

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உட்பட 4 பேர் மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது.

அதில், மரணமடைந்ததால், ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார். ஆனால், மற்ற மூன்று பேரும் குற்றவாளிகள் என்றும், அவர்கள் மூவரும் கீழ் நீதிமன்றத்தில் சரணடைந்து தங்களது தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அவர்கள் அளித்த 570 பக்க தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக அதாவது 211% அளவுக்கு சொத்து குவித்தது உறுதியாகியுள்ளது.

இது ஒன்றே மூன்று பேரையும் குற்றவாளி என அறிவிக்க போதுமானது.

நான்கு பேரின் அனைத்து சொத்துக்களை முடக்கவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.

சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் கூட்டுச் சதியில் ஈடுபட்டதை உறுதி செய்துள்ளது. கூட்டுச் சதி ஒன்றே இவர்களை தண்டிக்கப் போதுமானது.

அரசியலமைப்புச் சட்டம் 13ல் அரசு ஊழியர் அல்லது அவர் சார்பில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தால், குறைந்தபட்சம் 1 ஆண்டு முதல் தண்டனை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டப்படி 3 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பல வங்கிக் கணக்கில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு, ஜெயலலிதா பெயரில் சொத்துக்கள் வாங்கியதும், இவர்கள் கூட்டுச் சதியில் ஈடுபட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதில் பத்திரப்பதிவாளர் ஒருவரின் சாட்சியும் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், 570 பக்கம் கொண்ட தீர்ப்பில் குன்ஹாவின் தீர்ப்பில் கூறப்பட்ட சாராம்சங்களை ஆங்காங்கே சுட்டிக்காட்டிய நீதிபதிகள், குமாரசாமியின் தீர்ப்பை வேறு எங்கும் மேற்கோள் காட்டவில்லை.

 

கடைசியாக, குமாரசாமியின் தீர்ப்பில் கணக்குப் பிழை உள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இங்கு கொடுக்கப்பட்டுள்ள சாட்சிகளும், ஆதாரங்களும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் கணக்கிடப்பட்டுள்ள சொத்துகளின் மதிப்பு 8.12 சதவீதம் மட்டுமே என்று கூறப்பட்டுள்ளது. இதனை கணக்கிட்டதில் மிகப்பெரிய கணிதத் தவறு நிகழ்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் குற்றவாளிகள் அனைவரும் மேல்முறையீடு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com