ஜெயலலிதா சமாதியில் பிரமாண்ட நினைவிடம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் பிரமாண்ட நினைவிடம் அமைக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா அறிவித்தார்.
ஜெயலலிதா சமாதியில் பிரமாண்ட நினைவிடம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் பிரமாண்ட நினைவிடம் அமைக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா அறிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்களை மூன்றாவது நாளாக திங்கள்கிழமையும் சந்தித்துப் பேசினார். அப்போது, அவர் பேசியது:- எம்எல்ஏக்கள் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது. அது தொலைக்காட்சியிலும் வருகிறது. எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக முதல்வர் கூறுகிறார்.
ஒரு ஆளை வைத்து, பெண் எம்எல்ஏவின் பெயரைக் குறிப்பிட்டு அவரைக் காணவில்லை எனவும், நீதிமன்றத்தில் அவரை நிறுத்த வேண்டும் எனவும் வழக்குப் போட வைக்கிறார்.
தவறான காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறோம் எனச் சொல்கிறார். பொறுப்புள்ள இடத்தில் இருப்பவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.
தகுதியில்லாத முதல்வர்: தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்பதற்காக ஊர் முழுவதும் ஆள்களை வைத்து மிரட்டினீர்கள் என்றால் எப்படி நியாயம்? முதல்வர் பதவிக்கே தகுதியில்லாமல் இருந்தால் எப்படி?
ஆட்சி அமைப்போம்: சட்டம்-ஒழுங்கைக் காக்க வேண்டியவர்களே, ஆட்களை அனுப்பி மிரட்டினால் எப்படி. இது ரொம்ப மோசமான விஷயம். கூவத்தூர் போகும்போது மகிழ்ச்சியாகப் போகப் போகிறோம். நல்லபடியாக ஆட்சி அமைபோம்.
தர்மம் தலைகாக்கும்: அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்கும்போது யாரும் பசியோடு என்று இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் இருந்தது. பசிதீர்த்த தலைவர்களின் வழியில் வந்திருக்கிறோம். பசி தீர்க்கப்பட்டவர்களின் வாழ்த்துகள் என்றைக்கும் நமக்கு உண்டு. அப்படிச் செய்த நமக்கு தர்மம் தலைகாக்குமா, காக்காதா?
மக்களுக்கு நாம் எப்போதும் நல்லவற்றைச் வேண்டும். நல்லது செய்வதை எல்லோரும் பார்க்கத்தான் போகிறார்கள். உயிர் உள்ளவரை ஒற்றுமையாக இருந்து கட்சியைக் காப்பாற்றுவோம்.
சமாதியில் நினைவிடம்: ஜெயலலிதாவின் சமாதியானது, இப்படி ஒன்று இருக்கிறதா என அனைவரும் வியக்கும் வகையில் அங்கு ஒரு பிரமாண்ட நினைவிடம் அமைக்கப்படும். எம்ஜிஆர் 100-வது ஆண்டு நினைவாக ராமாவரம் தோட்டத்தில் அவரது பிறந்த தின நூற்றாண்டு வளைவு ஒன்று அமைக்கப்படும் என்றார் வி.கே.சசிகலா.
கூவத்தூரில் தங்கினார் சசிகலா
கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூரில் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நட்சத்திர விடுதியில் அக்கட்சியின் பொதுச் செயலர் வி.கே.சசிகலா திங்கள்கிழமை (பிப்.13) இரவு தங்கினார்.
அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நட்சத்திர விடுதியை கிராம மக்கள் மற்றும் செய்தியாளர்கள் 3-ஆவது நாளாக திங்கள்கிழமை ஆர்வத்துடன் சுற்றிச்சுற்றி வருகின்றனர்.
உணவில் ஒவ்வாமை? உணவு ஒவ்வாமை காரணமாக அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்களில் 4 பேர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மருத்துவக் குழுவினர் ஆம்புலன்ஸ்களில் வந்து சிகிச்சை அளித்துச் சென்றதாகத் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com