தன்னம்பிக்கையோடு சவால்களை எதிர்கொள்ள கற்றுக்கொடுங்கள்: சுவாமி மஹாமேதானந்தர்

தன்னம்பிக்கையோடு சவால்களை எதிர்கொள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் கற்றுக் கொடுக்க வேண்டும் என சுவாமி மஹாமேதானந்தர் தெரிவித்தார்.
சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற விவேகானந்த நவராத்திரி விழாவில் பேசுகிறார் சென்னை உயர் நீதிமனற நீதிபதி ஆர்.மகாதேவன். உடன், சுவாமி மஹாமேதானந்தர்.
சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற விவேகானந்த நவராத்திரி விழாவில் பேசுகிறார் சென்னை உயர் நீதிமனற நீதிபதி ஆர்.மகாதேவன். உடன், சுவாமி மஹாமேதானந்தர்.

தன்னம்பிக்கையோடு சவால்களை எதிர்கொள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் கற்றுக் கொடுக்க வேண்டும் என சுவாமி மஹாமேதானந்தர் தெரிவித்தார்.
சென்னை விவேகானந்தர் இல்லத்தில் விவேகானந்த நவராத்திரி பிப்ரவரி 9-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் 8-ஆவது நாளான திங்கள்கிழமை சுவாமி மஹாமேதானந்தர் மாணவர்களுக்கு "சுவாமி விவேகானந்தரின் செய்தி' எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில், சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் துறவி சுவாமி மஹாமேதனாந்தர், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி கோவிந்தராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
விழாவில் சுவாமி மஹாமேதானந்தர் பேசியதாவது: சுவாமி விவேகானந்தரின் கருத்துகள் கடல் போன்றது. அதன்படி, சுவாமிஜியின் கருத்துகள் அடங்கிய புத்தகங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு இன்றியமையாதது. தற்போது, மாணவர்கள் மத்தியில் மதிப்பெண்களை அதிகமாக பெறவேண்டும் எனும் குறிக்கோள் உள்ளது. இதனால், கடும் போட்டிகள் நடப்பதும், வாடிக்கையாக ஒருவர் பெறுவதும், மற்ற அனைவரும் ஏமாற்றமடைவதுமாக உள்ளது.
மதிப்பெண் மட்டும் போதாது: இது போன்ற கல்வி முறை சிறந்த சமூகத்துக்குப் பலனளிக்காது. ஏனெனில், முதல் மதிப்பெண் பெறும் பலரும் இதர திறமைகளில் கடைசியாக உள்ளனர். எனவே, மதிப்பெண்களோடு, ஒழுக்க நெறிகள், இதர வெளிப்புற திறமைகள், சமூக நலன் உள்ளிட்ட விஷயங்களிலும் கவனம் செலுத்துதல் ஆரோக்கியமானது. இதனை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோர் நன்கு புரிந்து கொள்வது அவசியம்.
அதுபோல், வெற்றி என்பது விருதுகள், பரிசுகள் மட்டுமல்ல. இலக்கு நிர்ணயித்து அதைச் சார்ந்த எண்ணங்கள் மூலம் தொடர்ந்து செயல்படுத்துதல், புரிந்து கொள்ளுதல், கவனத்துடன் ஆற்றலை வளர்த்துக் கொள்வது. அதுபோல், சிரத்தையுடன் இலக்கு நோக்கி பயணிக்கும் போது தோல்விகள் வரலாம். அதுவே சிறந்த அனுபவப் பாடமாக அமையும்.
போட்டிகள், சவால்கள் இருக்கத்தான் செய்யும். இதனை தன்னம்பிக்கையுடன் சந்திக்க, ஆசிரியர்கள் பெற்றோர் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதன்மூலம் சமூக பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் உலகத் தலைவர்களாக உருவெடுப்பார்கள். இதனையே சுவாமிஜியும் வலியுறுத்தியுள்ளார் என்றார் அவர்.
முன்னதாக, ஆதம்பாக்கம் டிஏவி பள்ளி மாணவர்களின் இசை-நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

ஞானம் கொப்பளிக்கும் புண்ணிய பூமி தமிழகம்!
விவேகானந்த நவராத்திரி விழாவில் நீதிபதி ஆர்.மகாதேவன் பேசியதாவது:
சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் அற்புதமானது. உண்மை, நேர்மை, வலிமை வழியில் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உள்ளது. அப்போது, ஸ்ரீராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தரை சந்தித்த கணம் அளப்பரிய ஆனந்தம் கொண்டது. இது, 7-ஆம் நூற்றாண்டில், சைவ நெறி பெரியோர்கள் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் சந்தித்துக் கொண்டதற்கு நிகரானது. இதன் மூலம் ஞானமும், பக்தியும் மானுடத்தை இறைவனிடம் கொண்டு சேர்க்கும் விதமாக அமைத்தது. எனவேதான், இளைஞர்கள் உள்ளிட்டோருக்கு குருவாக நின்று அவர்களின் கருத்துகள், இன்றளவும் வழிநடத்தி செல்கின்றன. அதன்படி, குருவழி ஞானம் பெறுவோர், உலகத்தைச் சமமாக நினைப்பர். அத்துடன், தன்னை உணர்வதற்கும், இறைவனில் இரண்டறக் கலப்பதற்கும், ஆனந்த வாழ்வுக்கும் வழிவகுக்கும் விதமாக உள்ளது.
இந்த வாய்ப்பினைப் பெறுவது எளிதல்ல. இதுபோன்ற ஞானவான்கள், மகான்கள், சித்தர்கள் பலரும் வாழும் இடம் தமிழகம். இதனை, பாபிலோனியர்களும் வரலாற்றில் பதிவு செய்துள்ளனர். அதில், ஞானம் கொப்பளிக்கும் புண்ணிய பூமி எனக் குறிப்பிடுகின்றனர். அதனாலேயே தமிழக இளைஞர்கள் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் சுவாமிஜி. அத்துடன், மதம், ஜாதி, பிரிவினைகளைக் கடந்து மாண்புற, உலகினருக்கு உயர்ந்த பாதையை வகுத்துக் கொடுத்துள்ளார் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com