தமிழக அரசியலை புரட்டிப்போட்ட வழக்கும்; மூன்று தீர்ப்புகளும்!

தமிழக அரசியலில் சுமார் 21 ஆண்டுகள் நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று வெளியானது.
தமிழக அரசியலை புரட்டிப்போட்ட வழக்கும்; மூன்று தீர்ப்புகளும்!

சென்னை: தமிழக அரசியலில் சுமார் 21 ஆண்டுகள் நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று வெளியானது. (தீர்ப்பின்முழுவிவரம்)

அதிமுக பொதுச் செயலர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதம் விதித்தும் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.

இதன் மூலம், தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று தமிழக முதல்வராகும் கனவோடு இருந்த சசிகலாவின் அரசியல் வாழ்க்கை சுமார் 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவே முடியாது என்ற அளவுக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதுபோல இந்த ஒரு வழக்கு விசாரணையின் பல்வேறு கட்ட தீர்ப்புகள், தமிழக அரசியலை அடியோடு புரட்டிப்போட்டிருப்பதை நாம் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.

1991 முதல் 1996-ஆம் ஆண்டு வரை தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, வருமானத்துக்குப் பொருந்தாத வகையில், ரூ.66.6 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது தோழியும் அதிமுகவின் தற்போதைய நியமன பொதுச் செயலாளருமான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வர் மீதும், இவர்கள் தொடர்புடைய தனியார் நிறுவனங்கள் மீதும் 1996-இல் திமுக ஆட்சியின்போது வழக்கு தொடுக்கப்பட்டது.

நீதிபதி குன்ஹா தீர்ப்பு

உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சென்னை தனி நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு, பின்னர் பெங்களூரு தனி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வருக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா 2014, செப்டம்பர் 27-ஆம் தேதி தீர்ப்பளித்தார்.

அதில்,

• ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய பேருக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

• ஜெயலலிதாவுக்கு மட்டும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் ஜெயலலிதா வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட பல்வேறு விலை மதிப்பு மிக்க ஆபரணங்களை ஏலம் விட்டு அபராதம் வசூலிக்கப்பட வேண்டும்.

• 4 ஆண்டுகாலம் தண்டனை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி உடனடியாக பறிபோனது.

• சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

• மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ. பதவியும் உடனடியாக ரத்தானது.

• ஊழல் தடுப்பு பிரிவில் ஒருவர் குற்றவாளி என்று நீதிமன்றம் தண்டனை விதித்தால் அவருக்கு எத்தனை ஆண்டு தண்டனை வழங்கப்படுகிறதோ அந்த தண்டனை காலம் முடியும் வரையும், அதன் பிறகு 6 ஆண்டுகளும் தேர்தலில் நிற்க முடியாது. இதன்படி மொத்தம் 10 ஆண்டுகாலம் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

நீதிபதி குமாரசாமி தீர்ப்பு

இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் தரப்பிலும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி (நீதிபதிகுமாரசாமிதீர்ப்பு), நால்வரையும் விடுதலை செய்து, 2015, மே 11-ஆம் தேதி தீர்ப்பளித்தார்.

4 ஆண்டு சிறை, 100 கோடி ரூபாய் அபராதம் என்ற மிகப்பெரிய தண்டனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஒருவேளை, அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவை குமாரசாமியும் குற்றவாளி என்று நிரூபித்திருந்தால், அவர் அடுத்து நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியாது. அப்போதே தமிழக அரசியல் களம் வேறு பாதையில் திரும்பியிருக்கலாம். இங்கும் தமிழக அரசியலில், சொத்துக் குவிப்பு தீர்ப்பு மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கிச் சென்றது.

ஆனால், குன்ஹாவின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நீதிபதி குமாரசாமி, குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து பிறப்பித்த இந்த மிக முக்கியத்துவம் பெற்ற தீர்ப்பைத் தான் உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து நீதிமன்ற வழக்கு விசாரணை நடைபெற்ற மாநிலம் என்ற அடிப்படையில் கர்நாடக அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதேபோல, ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக ஆரம்பத்தில் சென்னை தனி நீதிமன்றத்தில் வழக்காடியவர்கள் என்ற முறையில் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் ஆகியோரும் மேல்முறையீட்டு வழக்கில் மனுதாரர்களாக சேர்ந்து கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்த வழக்கில் கர்நாடக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் சித்தார்த் லூத்ரா வாதிடுகையில், விசாரணை நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், சொத்துகளை மதிப்பிட்டதில் கணக்கீட்டு பிழைகள் இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து, அரசுத் தரப்பும், குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பும் எழுத்துப்பூர்வ வாதத்தை கடந்த ஆண்டு ஜூன் 10-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பான தீர்ப்பை கடந்த ஆண்டு ஜூன் 7-ஆம் தேதி மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான சூழலில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இதனால், தமிழக முதல்வராக வேண்டும் என்ற சசிகலாவின் கனவு தகர்ந்தது. கட்சியில் இருந்து வெளியே வந்து போர்க்கொடி பிடித்த பன்னீர்செல்வத்துக்கு இது முதல் வெற்றி என்று எடுத்துக் கொண்டாலும், இந்த ஒரு விஷயமே அவரை முதல்வராக நீடிக்க வழி ஏற்படுத்திவிடும் என்று சொல்லிவிட முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com