நாகை எம்.எல்.ஏ.வின் கருத்து சேகரிப்பு முகாம் பாதியில் நிறுத்தம்

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து மக்களின் கருத்துகளை அறிய நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏற்பாடு செய்திருந்த
நாகை எம்.எல்.ஏ.வின் கருத்து சேகரிப்பு முகாம் பாதியில் நிறுத்தம்

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து மக்களின் கருத்துகளை அறிய நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏற்பாடு செய்திருந்த கருத்து சேகரிப்பு முகாம் 2 மணி நேரத்துக்குள் பாதியில் நிறுத்தப்பட்டது.

நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் (இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்), மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம். தமிமுன் அன்சாரி, தனது தொகுதி மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து தனது ஆதரவை யாருக்கு அளிப்பது என முடிவு செய்யப்படும் என அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை கருத்துக் கேட்புப் பெட்டி வைக்கப்பட்டது.

நாகையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க, சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களிடம் கருத்துக் கேட்புப் படிவம் வழங்கப்பட்டு, பெயர், வயது, முகவரி, வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றை எழுதி, அதனுடன் தங்கள் கருத்தையும் எழுதி பெட்டியில் இட கேட்டுக்கொள்ளப்பட்டது.

கருத்துத் தெரிவிக்கத் திரண்டவர்கள், தங்கள் கருத்தை படிவம் வாயிலாகத் தெரிவித்ததுடன், எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரியை நேரில் சந்தித்தும் தங்கள் கருத்தை  வலியுறுத்தினர்.

தொடக்கத்தில் திரண்டிருந்த பெரும்பாலானோர் ஒரே தரப்பினராக இருந்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில், காலை 10.30 மணியளவில் மாற்று தரப்பு ஆதரவாளர்கள் திரண்டு வந்து, தங்கள் ஆதரவு கருத்தை வெளிப்படுத்தி முழக்கமிடத் தொடங்கினர்.

இதனால், இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதமும், மோதலும் ஏற்படும் சூழல் உருவானது. இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனால், கருத்து சேகரிப்பு நிகழ்வு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டு, கருத்துக் கேட்புப் பெட்டி அலுவலகத்துக்குள் கொண்டு செல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் எம்.எல்.ஏ. அலுவலகத்திலிருந்து வெளியேறினர். உடனடியாக எம்.எல்.ஏ. அலுவலகம் பூட்டப்பட்டது. இதனிடையே அங்கு விரைந்த போலீஸார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை மேற்கொண்டு, கூட்டத்தை கலைந்து  செல்ல அறிவுறுத்தினர்.

தொடர்ந்து, எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

தலைமை நிர்வாகக் குழுவில் முடிவு...

இதுதொடர்பாக நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம். தமிமுன் அன்சாரியிடம் கேட்டபோது,  பொதுமக்களின் கருத்தை அறிந்து, அதனடிப்படையில் முடிவு மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. மக்கள் கருத்துகளை அறிய 2 ஆயிரம் படிவங்கள் அச்சிட்டிப்பட்டிருந்தன.

2 ஆயிரம் படிவத்திலும் கருத்துகள் பெறப்பட்டதால், கருத்துக் கேட்பு நிகழ்வு முடித்துக் கொள்ளப்பட்டது.  பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழு ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட பின்னர், யாருக்கு ஆதரவு என்பது அறிவிக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com