முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு

அரசுப் பதவி வகிப்போர் மீது ஊழல் தண்டனைச் சட்டப்படி தொடுக்கப்படும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர் இறந்து விட்டால் அவருடன் சேர்த்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றவர்கள் மீதான

அரசுப் பதவி வகிப்போர் மீது ஊழல் தண்டனைச் சட்டப்படி தொடுக்கப்படும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர் இறந்து விட்டால் அவருடன் சேர்த்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றவர்கள் மீதான வழக்கு செல்லுமா என்று நீடித்து வரும் கேள்விக்கு சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அளிக்கவுள்ள தீர்ப்பு முன்னுதாரணமாக விளங்கும் என்று கருதப்படுகிறது.
இது குறித்து சட்ட வல்லுநர்கள் கூறியதாவது: பொதுவாக குற்றவியல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முதலாவது நபர் இறந்து விட்டால், அவருடன் தொடர்புடையதாக வழக்கில் குற்றம்சாட்டப்படும் நபர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதே சமயம், ஊழல் தண்டனைச் சட்ட வழக்கில் குற்றம்சாட்டப்படும் அரசு பதவி வகித்த முதலாவது நபர் இறந்து விட்டால், அவருடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர் விடுதலை செய்யப்படுவதில் சில சட்ட நுணுக்கத்தைக் கடைப்பிடித்தாக வேண்டும்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஏற்கெனவே விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்து உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட முதலாவது நபர் இறந்து விட்டதால், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் எவ்வாறு கையாளப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், இரு நீதிபதிகள் அமர்வில் இருவரும் ஒரே நிலைப்பாட்டை எடுத்து தீர்ப்பு வழங்கினால் எந்த சிக்கலும் எழாது. இருவரும் மாறுபட்ட கருத்துகளுடன் கூடிய தீர்ப்பை எழுதினால், கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்படலாம் அல்லது மீண்டும் உயர் நீதிமன்ற விசாரணைக்கே இந்த மேல்முறையீட்டு வழக்கு அனுப்பப்படலாம். அந்த வகையில் இந்த வழக்கின் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது என்று சட்ட வல்லுநர்கள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com