யாருக்கும் ஆதரவு இல்லை: மு.க.ஸ்டாலின்

அதிமுக அணிகளில் யாருக்கும் திமுக ஆதரவு அளிக்காது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவும் எதிரிதான் என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக உயர்நிலைச் செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின்.
திமுக உயர்நிலைச் செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின்.

அதிமுக அணிகளில் யாருக்கும் திமுக ஆதரவு அளிக்காது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவும் எதிரிதான் என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக உயர்நிலைச் செயல்திட்டக் குழுக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திங்கள்கிழமை சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியது:-
பெரும்பான்மை அடிப்படையில்...: எம்எல்ஏக்களை சுதந்திரமாக வாக்களிக்க வைத்து, யாருக்கு பெரும்பான்மை உள்ளதோ, அவர்கள் ஆட்சி அமைப்பதற்கான நிலையை ஆளுநர் ஏற்படுத்த வேண்டும்.
தீர்ப்பு குறித்து...: சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்த பிறகுதான் சொல்ல முடியும். சசிகலா மீது சொல்லும் கருத்துகளுக்கு பதில் சொல்லி தரத்தையும், நேரத்தையும் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை.
அதிமுக எதிரிதான்: சட்டப் பேரவையில் திமுக எதிர்க்கட்சியாக இருக்கலாம். ஆனால், அரசியலைப் பொருத்தவரையில் அதிமுக என்பது எதிரிதான். அதிமுக இப்போது இரண்டாக சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் அணிகளாகப் பிரிந்திருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக இரண்டுமே அதிமுகதான்.
எனவே, யாருக்கும் பின்பக்கமாக ஆதரவு தெரிவிப்பது இல்லை. சசிகலா கூறுவதைப் போல, பேசுவது, சிரிப்பது என அவரின் மனதிற்கு தகுந்தாற்போல் அரசியலுக்காகப் பேசிக் கொண்டிருக்கலாமே தவிர, அதற்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை.
நல்ல முடிவு எடுக்கப்படும்: சட்டப்பேரவையில் பலப்பரீட்சை நடக்கும்போது, திமுக ஒரு நல்ல முடிவை எடுக்கும் என்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: முதல்வர் யார் என்று ஆளுங்கட்சிக்குள் நிலவும் அதிகாரப் போட்டியின் காரணமாக, நிலையற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. அரசியல் சட்ட ரீதியாக ஒரு பெரும் நெருக்கடியை தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் நிலையான அரசு அமைக்க மாற்று ஏற்பாடுகள் செய்ய முடியாமல் மத்திய பாஜக அரசின் கெடுபிடித் தந்திரத்தில் தமிழக ஆளுநரும் அகப்பட்டுள்ளாரோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.
எனவே, அரசியல் சட்ட விதிகள், மரபுகளுக்கு உட்பட்டு உடனடியாக நிலையான ஆட்சியை அமைக்க மாநில ஆளுநர் இனியும் கால தாமதம் செய்யாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பன உள்பட 11 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பொதுச்செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, ஐ.பெரியசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன், மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி உள்பட 20-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பாதியில் சென்ற கனிமொழி: கூட்டத்தில் கனிமொழி பங்கேற்றபோது ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு அருகில் ஒருவர் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்து பிடிபட்டதாக வந்த தகவலைத் தொடர்ந்து, பாதியிலேயே சென்றார்.
ஆளுநர் ஆட்சியை விரும்பும் திமுக
திமுக உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதிமுகவின் பெயரால் யார் ஆட்சி அமைக்க முயற்சித்தாலும், அவர்களுக்குத் திமுக ஆதரவு தெரிவிப்பது இல்லை. அப்படி தெரிவித்தால் சசிகலா கூறிவருவது உண்மையாகி விடும்.
அதே சமயம், தற்போதைய சூழலில் திமுகவும் ஆட்சி அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபடப் போவதில்லை. எந்த ஆட்சி அமைந்தாலும், அது நீண்ட நாள்களுக்கு நிலைத்து நிற்பதற்கு வாய்ப்பு இல்லை. ஆளுநர் ஆட்சி அமையலாம். அதன் பிறகு, தேர்தல் நடைபெற்றால், அதன் மூலம் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கலாம் என்று உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com