ராஜாத்தி அம்மாளுக்கு மிரட்டல்: இளைஞர் கைது

கனிமொழியின் வீட்டில் கொள்ளையடிக்கும் நோக்கோடு அத்துமீறி நுழைந்து, அவரது தாய் ராஜாத்தி அம்மாளை மிரட்டியதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கனிமொழியின் வீட்டில் கொள்ளையடிக்கும் நோக்கோடு அத்துமீறி நுழைந்து, அவரது தாய் ராஜாத்தி அம்மாளை மிரட்டியதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சென்னை மயிலாப்பூர் சிஐடி காலனி பிரதான சாலையில் திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியின் வீடு உள்ளது. இங்கு துப்பாக்கி ஏந்திய 4 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், அண்ணா அறிவாயயத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் பங்கேற்க கனிமொழி சென்றார். அப்போது வீட்டில் முதல் தளத்தில் உள்ள கனிமொழியின் கணவர் அரவிந்தன் அறைப் பகுதிக்கு ராஜாத்தி அம்மாள் சென்றார்.
அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர் திடீரென ராஜாத்தி அம்மாளிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி, பணம், நகை பணத்தை தரும்படியும் கேட்டார். இதையடுத்து, ராஜாத்தி அம்மாள் சுதாரித்துக் கொண்டு, தரைத்தளத்தில் உள்ள பிரோவில் இருந்து நகை, பணம் எடுத்து தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அப்போது அங்கு வந்த இரு வேலைக்கார பெண்களை பிணைகளாகப் பிடித்து வைத்துகொண்டு ராஜாத்தி அம்மாளிடம் நகை, பணத்தை எடுத்து வரும்படியும், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தால் இருவரையும் சுட்டுக் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டினார்.
இதையடுத்து தரைத்தளத்துக்கு வந்த ராஜாத்தி அம்மாள் வீட்டின் வெளியே பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீஸாரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அவர்கள் அதிரடியாக நுழைந்து, மர்ம நபரை பிடித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் மர்ம நபர் திருவல்லிக்கேணி ஹரிமுத்து தெருவைச் சேர்ந்த பட்டதாரி சீ.ராஜேந்திரபிரசாத் (30) என்பது தெரிய வந்தது. மேலும், புரோகிதம் செய்து வந்த நிலையில் சரியாக பணம் கிடைக்காததால் கொள்ளையடிக்கும் முடிவோடு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவே வீட்டில் புகுந்ததாகவும், மாலையில் வீட்டில் ஆள்நடமாட்டம் குறைந்த பின்னர், பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும், அந்த வீடு கனிமொழியின் வீடு என்று தெரியாது எனவும் அவர் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிள் சிக்கியது: இதற்கிடையே, கனிமொழி வீட்டின் பின்பகுதியில் இருந்து போலியான பதிவு எண் கொண்ட பிரசாத்தின் மோட்டார்சைக்கிளை போலீஸார் கைப்பற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com