வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட ரூ.300 கோடி ஐம்பொன் சிலைகள் மீட்பு: ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்

தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட ரூ. 300 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக, தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்
வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட ரூ.300 கோடி ஐம்பொன் சிலைகள் மீட்பு: ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்

தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட ரூ. 300 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக, தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம், பழவூர் நாறும்பூநாதர் கோயிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சுவாமி சிலைகள் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டன.
அந்தச் சிலைகள் கடந்த 2008-ஆம் ஆண்டு மீட்கப்பட்டன. சிலைகள் இருந்த பழவூர் நாறும்பூநாதர் கோயிலில், தில்லியில் இருந்து வந்த தொல்லியல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினர்.
இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
பழவூர் நாறும்பூநாதர் கோயிலில் இருந்து ஐம்பொன்னில் செய்யப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த சுவாமி மற்றும் அம்பாள் சிலைகள் கடந்த 2006-ஆம் ஆண்டு சிலை கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டது. கடத்தப்பட்ட 13 சிலைகளில் 9 சிலைகள் கடந்த 2008-ஆம் ஆண்டு மீட்கப்பட்டன. இதில் நடராஜர் சிலை ரூ.15 கோடி மதிப்பு கொண்டதாகும். இந்தச் சிலை அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டபோது சிலையின் கை சேதமடைந்ததால் அது லண்டனுக்கு கொண்டுசெல்லப்பட்டு சரிசெய்யப்பட்டது. சிங்கப்பூரில் மீட்கப்பட்ட அம்மன் சிலையின் மதிப்பு ரூ.5 கோடி, நியூயார்க்கில் மீட்கப்பட்ட மாணிக்கவாசகர் சிலையின் மதிப்பு ரூ. 2 கோடி. ஸ்பெயினில் மீட்கப்பட்ட காரைக்கால் அம்மையார் சிலையின் மதிப்பு ரூ. 2 கோடி.
தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு கடந்த 5 ஆண்டுகளில் சிலை கடத்தல் எதுவும் நடக்கவில்லை. உள்ளூர் சிலை திருட்டைக் கண்டுபிடிக்க உள்ளூர் போலீஸாருக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கோயில்களில் கிரில் கேட், கண்காணிப்பு கேமரா, அலாரம் போன்றவை அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட ரூ. 300 கோடி மதிப்பிலான சிலைகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்து அமெரிக்கா, சிங்கப்பூர், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்குத்தான் அதிகளவில் சிலை கடத்தப்பட்டுள்ளது. அதிலும் ஆஸ்திரேலியாவுக்குதான் அதிகளவில் சிலை கடத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து மட்டும் ரூ.150 கோடி மதிப்பிலான சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் ரூ. 1,000 கோடி மதிப்பிலான சிலைகள் மீட்கப்பட வேண்டியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 1,200 அரசு மற்றும் தனியார் கோயில்களில் பஞ்சலோக சிலைகள் உள்ளன. இதில் 75 சதவீத சிலைகள் மிகவும் பழைமை வாய்ந்தவையாகும் என்றார் அவர்.
பேட்டியின்போது கன்னியாகுமரி டி.எஸ்.பி. வேணுகோபால், சிலை தடுப்புப் பிரிவு ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com