21 ஆண்டுகளுக்குப் பின்னர் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது

சொத்துக் குவிப்பு வழக்கில் 21 ஆண்டுகளுக்கு பின்னர் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
21 ஆண்டுகளுக்குப் பின்னர் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது

சொத்துக் குவிப்பு வழக்கில் 21 ஆண்டுகளுக்கு பின்னர் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மேலும், தமிழகத்தில் நிலையான ஆட்சியை அமைக்க உடனடியாக ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்திலும், பின்னர் விமான நிலையத்திலும் அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
பல்வேறு தடைகளைக் கடந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குறிப்பாக நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பில், முதல்வராக இருந்த ஜெயலலிதா, சசிகலா நடராஜன், இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டு தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மீதமுள்ள 3 பேருக்கு தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
இனி அரசியல்வாதிகளாக இருப்பவர்கள் பொதுவாழ்வில் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும், வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாகவும் அமைந்துள்ளது.
தீர்ப்பு வெளியாகிவிட்டதால், தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சியை உருவாக்க, அரசியல் சாசன சட்ட விதிமுறைகளுக்கு உள்பட்டு ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எடப்பாடி தேர்வு: அதிமுக சட்டப் பேரவை குழுத் தலைவராக எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளது உள்கட்சி பிரச்னை. யாரை வேண்டுமென்றாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
வாடிக்கையாகிவிட்டது: அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் வெறும் அறிவிப்புகளே அறிவிக்கப்பட்டு வந்தன. ஜல்லிக்கட்டுப் பிரச்னையில் கடற்கரையில் 144 தடை உத்தரவு போட்டார்கள். காபந்து ஆட்சியில் கூவத்தூரில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதுவே வாடிக்கையாகி விட்டது. இன்னும் என்னவெல்லாம் நடக்கிறது என்று வேடிக்கை பார்ப்போம் என்றார்.
பெரும்பான்மையை நிரூபிப்பவருக்கே...: இதையடுத்து, "ஆட்சியை கலைத்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை வைக்கிறார்களே?' என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்து ஸ்டாலின் கூறியதாவது:-
அதிமுகவில் பிரச்னை தொடங்கியபோதே, ஆளுநரைச் சந்தித்து தெளிவாக திமுகவின் நிலையைத் தெரிவித்துள்ளோம். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை யார் நிரூபிக்கிறார்களோ, அவர்களுக்கு ஆட்சி அமைக்க அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சொத்துக்குவிப்பு வழக்கு 1996-ஆம் ஆண்டு முதல்...
ஜூன் 14, 1996: ஜெயலலிதா தனது ஆட்சிக்காலமான 1991 முதல் 1996-ஆம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
ஜூன் 4, 1997: ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
நவ.18, 2003: ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்றதை அடுத்து, வழக்கை தமிழகத்திலிருந்து கர்நாடகத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
செப்.27, 2014: கர்நாடக சிறப்பு நீதிமன்றம் 4 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்து, 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.
அக்.17, 2014: உச்சநீதிமன்றம் 4 பேருக்கு ஜாமீன் வழங்கியது.
மே 11, 2015: வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஜூன் 23, 2015: கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது.
டிச.5, 2016: ஜெயலலிதா மறைந்தார்.
டிச.29, 2016: அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு.
பிப்.5, 2017: சட்டப்பேரவை அதிமுக தலைவராக சசிகலா தேர்வு.
பிப்.14, 2017: சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை குற்றவாளிகளாகத் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். மீதமுள்ள தண்டனைக் காலத்தை அனுபவிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஜெயலலிதா உயிரிழந்ததன் காரணமாக அவர் மீதான நடவடிக்கைகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com