8 நிமிடங்களில் வெளியான தீர்ப்பு

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் தொடர்புடைய சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை எட்டு நிமிடங்களில்
8 நிமிடங்களில் வெளியான தீர்ப்பு

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் தொடர்புடைய சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை எட்டு நிமிடங்களில் வழங்கியது.

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தின் ஆறாவது நீதிமன்ற அறையில் நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமிதவா ராய் இடம்பெற்ற அமர்வில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இதையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நீதிமன்ற அறைக்கு வெளியே ஏராளமான வழக்குரைஞர்கள், அதிமுக வழக்குரைஞர் அணியைச் சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள் பெருமளவில் குவிந்தனர்.

நீதிமன்ற அறைக்குள் நுழைவதற்கு பலத்த சோதனை, கெடுபிடிகளை அனைவரும் எதிர்கொண்டனர். இந்நிலையில், நீதிமன்ற அறைக்குள் இருந்தவர்கள் தீர்ப்பு எவ்வாறு அமையும் என விவாதிக்கத் தொடங்கினர். சரியாக 10.30 மணி நெருங்கியதும் அனைவரும் அமைதியடைந்து நீதிபதிகளின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கினர். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, நீதிமன்றத்துக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு அதிகாரி ஏ.எம்.எஸ். குணசீலன் உள்ளிட்ட உயரதிகாரிகள், மூத்த வழக்குரைஞர் சண்முக சுந்தரம் உள்ளிட்டோர் வந்தனர். இதில் அதிகாரி குணசீலன் பணியில் இருந்து ஓய்வு பெற்று சில ஆண்டுகள் ஆகிறது. எனினும், சொத்துக் குவிப்பு வழக்கு முக்கிய விசாரணை அதிகாரியாக இவர் இருந்ததால், தொடர்ந்து பணி நீட்டிப்பு அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையிலேயே பணியாற்றி வருகிறார்.

8 நிமிடத்தில் தீர்ப்பு: இதற்கிடையே, நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமிதவா ராய் தங்களது இருக்கைக்கு சரியாக 10.32 மணிக்கு வந்தனர். இதைத் தொடர்ந்து, நீதிபதி பினாகி சந்திர கோஷ், நீதிபதி அமிதவா ராயிடம் சில நிமிடங்கள் பேசினார். இதையடுத்து, சீலிடப்பட்ட உறையில் இருந்த தீர்ப்பின் ஆவணத்தை நீதிமன்ற உதவியாளர் பிரித்து நீதிபதிகளுக்கு அளித்தார். தீர்ப்பின் ஆவணத்தைப் பெற்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ், தீர்ப்பின் ஆவணம் மிகப் பருமனாக உள்ளது. இதன் பாரத்தை நாங்கள் எடுத்துக் கொண்டோம் எனத் தெரிவித்து தீர்ப்பின் முக்கிய அம்சங்களை வாசிக்கத் தொடங்கினார்.

தீர்ப்பின் விவரம் வாசிக்கப்பட்டிருக்கும் போதே நீதிமன்ற அறையில் இருந்த சில நிருபர்கள் தங்கள் அலுவலகங்களுக்குச் செய்தி கொடுப்பதற்காக கூட்டத்தில் இருந்து முண்டியடித்தபடி வெளியேறினர். அப்போது கூட்டத்தில் இருந்த வழக்குரைஞர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே சிறிது சலசலப்பு காணப்பட்டது.

இதற்கு மத்தியில் நீதிபதி அமிதவா ராய், இந்தத் தீர்ப்பில் நீதிபதி பினாகி சந்திர கோஷுடன் ஒத்துப்போகிறேன். சமூகத்தில் அதிகரித்து வரும் அச்சமடைய வைக்கும் ஊழல் குறித்து எனது தீர்ப்பில் ஆழமான கவலையைப் பதிவு செய்துள்ளேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com