அரசியலுக்குள் நுழைகிறேன்: ஜெயலலிதா சமாதியில் ஓபிஎஸ்-ஸை சந்தித்த பின் தீபா அறிவிப்பு

அதிகாரப்பூர்வமாக அரசியலுக்குள் நுழைகிறேன் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அறிவித்தார்.
ஜெயலலிதா சமாதியில் செவ்வாய்க்கிழமை இரவு அஞ்சலி செலுத்திய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெ.தீபா.
ஜெயலலிதா சமாதியில் செவ்வாய்க்கிழமை இரவு அஞ்சலி செலுத்திய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெ.தீபா.

அதிகாரப்பூர்வமாக அரசியலுக்குள் நுழைகிறேன் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அறிவித்தார்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளான வரும் 24-ஆம் தேதியன்று அரசியல் பிரவேசம் பற்றி அறிவிக்க இருப்பதாகத் தெரிவித்த அவர் இப்போது திடீரென அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை இரவு வருவதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, அங்கு அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் வந்தனர்.
தீபாவுக்கு காத்திருந்த ஓ.பி.எஸ்.: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரவு 9.15 மணியளவில் எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கு வந்தார். அப்போது, அவர் ஜெயலலிதாவின் சமாதிக்குள் வராமல் காத்திருந்தார். அவர் யாருக்காக காத்திருக்கிறார் என்று அனைவரது மத்தியிலும் கேள்வி எழுந்தது.
அப்போது, திடீரென ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்குள் நுழைந்தார். இது அங்கு கூடியிருந்தவர்களிடம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தீபா முன்னே செல்ல முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அவரைப் பின்தொடர்ந்தனர். பின்னர், ஜெயலலிதாவின் சமாதியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விழுந்து வணங்கினார். அவரைத் தொடர்ந்து, மாநிலங்களவை உறுப்பினர் வா.மைத்ரேயன், முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
அவர்களைத் தொடர்ந்து, தீபாவும் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் வணங்கினார். தீபாவுடன், முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சமாதியைச் சுற்றி வந்து வணங்கினார். இதன் பின், செய்தியாளர்களுக்கு தீபா அளித்த பேட்டி:
இரு கரங்களாகச் செயல்படுவோம்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், நானும் (தீபா) இருகரங்களாகச் செயல்படுவோம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை நாங்கள் இணைந்து மேற்கொள்வோம் என்றார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர். நீங்கள் இப்போது அதிகாரப்பூர்வமாக அரசியலுக்குள் நுழைகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ஆம், அதிகாரப்பூர்வமாக அரசியலுக்குள் நுழைகிறேன் என்றார்.
இதன் பின் சசிகலாவுக்கு உச்ச நீதிமன்றம் தண்டனை வழங்கியள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த தீபா, அவர்கள் இருக்க வேண்டிய இடத்துக்குச் செல்கிறார்கள். இந்தக் கருத்தை தீர்ப்பு வெளிவந்த இன்று காலையில் இருந்தே கூறி வருகிறேன் என்றார் தீபா.
இந்தச் சந்திப்பு குறித்து, ஓ.பன்னீர்செல்வம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. மேலும், ஜெயலலிதா சமாதியில் அவர் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை.
ஓபிஎஸ் இல்லத்தில் தீபா
சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு திடீரென முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை இரவு சென்றார். அப்போது,அங்கு வந்த தீபா, முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தைச் சந்தித்து இரு கரங்களாகச் செயல்படுவோம் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து அரசியலுக்கு வருவதாக தீபா தெரிவித்தார்.
இதையடுத்து சென்னை மெரீனா கடற்கரையில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு தீபா சென்றார். அவரை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி ஆரத்தி எடுத்து வரவேற்று அழைத்துச் சென்றார். தீபாவுடன் அவரது ஆதரவாளர்களும் வந்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com