ஊழலை ஒழிப்பதில் குடிமகனின் பொறுப்பு என்ன? ஏழு பக்க தீர்ப்பில் நீதிபதி விளக்கம்

ஊழல் எனும் கொடூரத்தை ஒழிப்பதில் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள பொறுப்பு குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி அமிதவா ராய் விளக்கியுள்ளார்.
ஊழலை ஒழிப்பதில் குடிமகனின் பொறுப்பு என்ன? ஏழு பக்க தீர்ப்பில் நீதிபதி விளக்கம்

ஊழல் எனும் கொடூரத்தை ஒழிப்பதில் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள பொறுப்பு குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி அமிதவா ராய் விளக்கியுள்ளார்.

வருமானத்துக்குப் பொருந்தாக வகையில் சொத்து சேர்தததாக தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் அமர்வில் நீதிபதி அமிதவா ராய் உள்ளார். இவர் ஏழு பக்கங்கள் அடங்கிய தீர்ப்பை தனியாக எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அதிக அளவிலான சொத்துகளை குவிக்கவும், சட்டவிரோதமாக சில நிறுவனங்களை தோற்றுவித்து அவற்றின் மூலம் நிதிப் பரிவர்த்தனை செய்து சட்டத்தை ஏமாற்றும் வகையில் மிகவும் ஆழமாகக் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ள குற்றச்சாட்டுகள், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நிரூபணமாகியுள்ளது.

பொது வாழ்வின் நோக்கம்: பொது வாழ்க்கையில் நேர்மையாகவும் மனசாட்சிப்படியும் கடமை ஆற்றுவேன் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டு, பொது வாழ்விலும் ஆட்சியிலும் இருப்பவர்கள் தங்களுக்குரிய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சட்டத்தை வளைத்து, தங்களுக்கு விசுவாசமாக உள்ளவர்களுடன் சேர்ந்து ஊழலில் ஈடுபட்டால், அவர்கள் அனைவரும் இந்த சமுதாயத்துக்கும் தேசத்துக்கும் பதில் கூற கடமைப்பட்டவர்கள்.

பதவி ஏற்கும் போது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு மாறாக செயல்படுபவர்கள், மக்கள் அவர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை சிதைத்து ஏமாற்றியுள்ளனர். இத்தகைய குணம் மிக்கவர்கள் தேசத்தின் நீதி, சுதந்திரம், சமவுரிமை, சமூக மதிப்பு, ஒற்றுமை, நேர்மை ஆகியவற்றுக்கும் ஒவ்வொரு குடிமகனின் எதிர்பார்ப்புக்கும் கேடு விளைவிப்பவர்கள். ஜனநாயகத்தின் அடித்தளமான அரசியலமைப்பின் மீதே தாக்குதல் நடத்திய மன்னிக்க முடியாதவர்களாகக் கருதப்படுவர்.

குடிமகனின் கூட்டு இயக்கம்: சமூகத்துக்கு கேடு விளைவித்து மூச்சுத் திணறக் கூடிய அளவுக்கு குரல்வளையை நெரிக்கும் இந்தக் கொடிய நிலை மாறி, சுதந்திரமான சமூக ஒழுங்கு தற்போதைய சூழலில் நிலவ வேண்டுமானால், அனைவரும் கூட்டுச் சேர்ந்து, ஈடுபாட்டுடனும் துணிச்சலுடனும் இதுபோன்ற கொடூரத்தை (ஊழல்) எதிர்க்க வேண்டும். சுதந்திரமான, தனித்தன்மை வாய்ந்த இந்தியா மலர வேண்டுமானால், நமது முன்னோர்கள் வகுத்துச் சென்ற பாதையில் ஊழலுக்கு எதிரான நிலையான புனிதத் தன்மையுடன் கூடிய இயக்கத்தில் ஒவ்வொரு குடிமகனும் பங்குதாரராக வேண்டும் என்று நீதிபதி அமிதவா ராய் கூறியுள்ளார்.

கவலையில் அதிமுக வழக்குரைஞர்கள் சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என காத்திருந்த அதிமுக வழக்குரைஞர்கள், முடிவு தெரிந்ததும் கவலை அடைந்தனர். தீர்ப்பின் முக்கிய அம்சத்தை அறிந்த அவர்கள், உடனே நீதிமன்ற அறையைவிட்டு வெளியேறி தீர்ப்பின் விவரத்தை செல்லிடப்பேசி வழியாக தங்கள் நண்பர்களுடனும் கட்சித் தலைமை நிர்வாகிகளிடமும் பகிர்ந்து கொண்டனர். சசிகலாவுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானால் நீதிமன்ற அறைக்கு வெளியே இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை கொண்டாட ஒரு பிரிவு வழக்குரைஞர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், தீர்ப்பு எதிர்பார்த்தபடி அமையாததால் அவர்கள் கவலையுடன் நீதிமன்ற அறையில் இருந்து புறப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com