கூண்டிலிருந்தாலும் அதிமுகவை வழிநடத்துவேன்: சசிகலா பேச்சு

கூண்டிலிருந்தாலும் அதிமுகவை வழிநடத்துவேன் என்று கட்சியின் பொதுச்செயலர் வி.கே.சசிகலா கூறினார்.
கூவத்தூரில் இருந்து போயஸ் இல்லம் திரும்பிய வி.கே.சசிகலா.
கூவத்தூரில் இருந்து போயஸ் இல்லம் திரும்பிய வி.கே.சசிகலா.

கூண்டிலிருந்தாலும் அதிமுகவை வழிநடத்துவேன் என்று கட்சியின் பொதுச்செயலர் வி.கே.சசிகலா கூறினார்.
என்னை எந்தக் கூண்டில் அடைத்தாலும், என் மனதை அடைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
அதிமுக பேரவை உறுப்பினர்களுடன் கூவத்தூருக்கு திங்கள்கிழமை சென்று வி.கே.சசிகலா விடுதியில் தங்கினார். சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்த பிறகும் செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு வரை அங்கிருந்த சசிகலா, இரவு 9.30 மணி அளவில் போயஸ் தோட்ட இல்லத்துக்குப் புறப்பட்டார். கூவத்தூரிலிருந்து புறப்பட்டபோதும், போயஸ் தோட்ட இல்லத்தை இரவு 11 மணி அளவில் வந்தடைந்தபோதும் தொண்டர்களின் மத்தியில் சசிகலா பேசியதாவது:
""நீங்கள் (அதிமுக தொண்டர்கள்) யாரும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். அதிமுக தொண்டர்கள் தைரியமாகச் செயல்பட வேண்டும். ஒருவர் 10 பேரின் பணியைச் செய்ய வேண்டும்.
நான் எங்கிருந்தாலும் அதிமுகவையும் உங்களையும் (தொண்டர்களை) நினைத்துக் கொண்டே இருப்பேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை பிரமாண்டமாக அமைப்பது, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ராமாவரம் தோட்டத்தில் வளைவு அமைப்பது ஆகிய பணிகளை அதிமுகவினர் செய்ய வேண்டும்.
தாற்காலிகமானதுதான்: எனக்கு வந்துள்ள பிரச்னை தற்காலிகமானதுதான். அதை சமாளிக்க என்னால் முடியும். சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு நமக்கு உள்ளது. அதிமுகவை என்னிடம் இருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.
"எதையும் தாங்கும் இதயம் வேண்டும்' என்றார் அண்ணா. அதேபோன்று துணிச்சலுடன் செயல்பட வேண்டியதைத்தான் எம்ஜிஆரின் திரைப்பட பாடல்களும் கூறியுள்ளன. எனவே அதிமுக தொண்டர்கள் எப்போதும் துணிச்சலுடன் செயல்பட வேண்டும்.
தர்மத்துக்கு சோதனை வரும்; சோதனையை வெல்வோம். நாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்'' என்றார் சசிகலா.

"திமுக இருக்கக் கூடாது'
அதிமுகவை அழிக்க நினைக்கும் திமுக இருக்கக் கூடாது என்று அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலா கூறினார்.
கூவத்தூரிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு புறப்படுவதற்கு முன்பு அதிமுக தொண்டர்களிடம் அவர் பேசியதாவது: எத்தனையோ வற்புறுத்தல்கள், அழுத்தங்கள் வந்தாலும் என்னை நீங்கள் (தொண்டர்கள்) ஆதரிக்கிறீர்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதும் எங்கள் மீதும் (சசிகலா, இளவரசி, சுதாகரன்) இந்த வழக்கை சுமத்தி இப்போது தண்டனை பெற்றுத் தந்ததே திமுகதான். திமுகதான் இந்த வழக்குக்கு காரணம்.
இந்த வழக்கு தாக்கல் செய்த பிறகு பல முறை ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மக்கள் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக பேரவை உறுப்பினர்களின் ஆதரவு நமக்கு உள்ளது. கூடிய விரைவில் ஆட்சி அமைப்போம். சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத்தை வைப்போம். அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கும் தி.மு.க. என்ற ஒரு கட்சி இருக்கக் கூடாது என்றார் சசிகலா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com