சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை: தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் சேர்த்ததாக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு
சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை: தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் சேர்த்ததாக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் விதித்த நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியது.
எனினும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தற்போது உயிருடன் இல்லை என்பதால் அவருக்கான தண்டனையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.
தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமிதவா ராய் ஆகியோர் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு அளித்தனர். இருவரும் சேர்ந்து மொத்தம் 563 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பை அளித்தனர். மேலும், நீதிபதி அமிதவா ராய் தனியாக ஏழு பக்கத் தீர்ப்பை அளித்தார். இதில் இரு நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:


குற்றச்சாட்டுகள் என்ன?: சொத்துக் குவிப்பு வழக்கில் முதலாவது நபராக குற்றம்சாட்டப்பட்டவரான (ஜெயலலிதா), "நிதிப் பரிவர்த்தனை, பயன்பாடு தொடர்பான இரண்டாவது குற்றம்சாட்டப்பட்ட நபரின் (சசிகலா) செயல்பாடு பற்றி தாம் அறிந்திருக்கவில்லை' எனக் கூறியதை விசாரணை நீதிமன்றம் ஏற்கவில்லை. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் ஒருவருக்கொருவர் நன்றாக அறிந்து உள்நோக்கத்துடன் சதியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணை நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட 21 நிறுவனங்களில் 18 நிறுவனங்கள் அவை தொடங்கப்பட்ட தொழிலுக்கான நோக்கத்தையோ அத்தொழிலுக்கான பரிவர்த்தனை, முதலீடு போன்றவற்றையோ அல்லது லாபத்துடன் செயல்பட்டதற்கான கணக்கையோ முறைப்படி பராமரிக்கவில்லை. ஒரே நாளில் 10 நிறுவனங்கள் தொடங்கப்பட்டது, குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் (சசிகலா, இளவரசி) மீது தனிப்பட்ட நிறுவனங்களைத் தொடங்கியது, முடங்கிய நிலையில் உள்ள நிறுவனங்களை வாங்கியது போன்ற குற்றச்சாட்டுகள் சம்பந்தப்பட்ட நான்கு பேர் மீதும் சுமத்தப்பட்டுள்ளன.
திடீர் வருவாய் எப்படி: ஜெயலலிதாவுடன் எண் 36, போயஸ் தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்த சசிகலா, ஜெயா பதிப்பகம், சசி எண்டர்பிரைசஸ், நமது எம்ஜிஆர் ஆகிய நிறுவனங்களைத் தொடங்கியுள்ளதும் இந்த சொத்துகள் உள்ளிட்ட ரூ.2.01 கோடி சொத்துகளை 1.7.1991 நிலவரப்படி வாங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்தத் தேதிக்குப் பிறகு திடீரென ஜே.பண்ணை வீடு, ஜே.எஸ்.வீட்டு வசதி நிறுவனம், ஜே ரியல் எஸ்டேட், கிரீன் பண்ணை வீடுகள், ராம்ராஜ் அக்ரோ, லெக்ஸ் பிராப்பர்டீஸ், சிக்னோரா பிசினஸ் எண்டர்பிரைசஸ், சூப்பர் டூப்பர் டிவி, கொடநாடு டீ எஸ்டேட் உள்ளிட்ட 22 பெயர்களில் சொத்துகளை ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவரும் சேர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் பெயர்களில் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
1991 முதல் 1996-ஆம் ஆண்டு வரையிலும் இந்த நிறுவனங்கள் அவை தொடங்கப்பட்டதற்கான நோக்கத்துடன் தொடர்புடைய தொழிலை செய்ததற்கான முகாந்திரம் இல்லை. ஆனால், நிலங்கள், கட்டடங்கள், சாதனங்கள் போன்றவற்றை வாங்கிக் குவிப்பதில் அவை அக்கறை காட்டியுள்ளது விசாரணையில் நிரூபணமாகியுள்ளது.


இவ்வாறு குற்றம்சாட்டப்பட்ட நால்வருக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளில் நிதிப் பரிவர்த்தனைகள் அதிக அளவில் நிகழ்ந்தன. குற்றம்சாட்டப்பட்ட முதலாவது நபரான ஜெயலலிதா, 1991-1996 ஆண்டுகள் வரை தமிழக முதல்வராகப் பதவி வகித்ததால் அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தி ரூ.66.65 கோடி அளவுக்கு வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துகள் சேர்த்ததாக நால்வர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.
தனி நீதிமன்றம் தீர்ப்பு: இவர்களுக்கு எதிராக பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, 99 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட முதலாவது நபரான ஜெயலலிதாவின் உதவியுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் ரூ.66.65 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை பெங்களூரு தனி நீதிமன்றம் உறுதிப்படுத்தி நால்வருக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து 2014, செப்டம்பர் 14-இல் தீர்ப்பளித்துள்ளது.
முதல்வராகப் பதவி வகித்த காலத்தில் தனக்கு வந்த வருமானத் தொகை ரூ.9.91 கோடி, செலவினம் ரூ.8.49 கோடி நீங்கலாக சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெயரில் அசையா சொத்துகளை வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் ரூ.53.60 கோடி அளவுக்கு ஜெயலலிதா வாங்கிய செயலை நியாயப்படுத்த குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பில் அளித்த விளக்கத்தை பெங்களூரு தனி நீதிமன்றம் ஏற்கவில்லை.
அந்த வகையில் ஊழல் தண்டனைச் சட்டத்தின் 13(1), 13(2) ஆகிய பிரிவுகளின்படி ஜெயலலிதாவும் அவருடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கூட்டுச் சதியில் ஈடுபட்டது சந்தேகத்துக்கு இடமின்றி நீதிமன்ற விசாரணையின் போது நிரூபிக்கப்பட்டு விட்டதால், நால்வரை குற்றவாளிகள் என்று தனி நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதில் ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை, ரூ.100 கோடி அபராதம் அல்லது ஓராண்டு சிறை மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறை மற்றும் தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இவர்களுடன் தொடர்புடைய லெக்ஸ் புராப்பர்டி டெவலப்மென்ட்ஸ், மீடோ அக்ரோ ஃபார்ம்ஸ், சிக்னோரா பிசினஸ் எண்டர்பிரைசஸ், ரிவர்வே அக்ரோ புராடெக்ட்ஸ், தோஹா கெமிக்கல்ஸ் அண்ட் ஃபார்மசூட்டிக்கல்ஸ் ஆகிய நிறுவனங்களின் சொத்துகளை முடக்கி வைக்க தனி நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றம் விடுதலை: இந்தத் தீர்ப்பை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து வழக்கு விசாரணை நடைபெற்ற மாநிலம் என்ற அடிப்படையில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த விவகாரத்தில் பெங்களூரு தனி நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகள் விரிவாக விசாரிக்கப்பட்டு இரண்டின் அம்சங்களும் ஆராயப்பட்டன. குறிப்பாக, குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் பெங்களூரு தனி நீதிமன்றம் உறுதிப்படுத்திய குற்றச்சாட்டுகள் மீதான தன்மையை எதிர்க்காமல் சொத்துகள் கணக்கீட்டில் தவறு இழைக்கப்பட்டதாகவே வாதிட்டுள்ளனர். வருமானத்துக்கு பொருந்தாத வகையில் ஈட்டிய சொத்துகளுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற வாதத்தை அவர்கள் முன்வைக்கவில்லை. கணக்கீட்டில்தான் தவறு என்பது அவர்களின் வாதமாக இருந்துள்ளது.
இந்த விஷயத்தில் தனி நீதிமன்றம் கடைப்பிடித்த விசாரணையின் அம்சங்களை கவனத்தில் கொள்ளாமல் சொத்து மதிப்பில் மொத்த வருமானத்தைக் கழித்து வரும் தொகை, மொத்த வருமானத்தில் 8.12 சதவீதம் மட்டுமே என்று தவறாகக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாக உச்ச நீதிமன்றம் முடிவுக்கு வருகிறது. எனவே, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்கிறோம்.
தண்டனைக்கு முகாந்திரம்: ஊழல் தடுப்புத் சட்டத்தின்படி, தண்டனை விதிக்கப்பட்ட குற்றம்சாட்டப்பட்ட அரசுப் பதவி வகித்தவர் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின் போது, உயிரிழந்து விட்டால் குற்றம்சாட்டப்பட்ட மற்ற நபர்களுக்கு தண்டனை விதிக்க முகாந்திரம் உள்ளது என்று ஏற்கெனவே 2014-இல் உச்ச நீதிமன்றம் வழக்கு ஒன்றில் அளித்த தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில், கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு பெங்களூரு தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்துகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முதலாவது நபரான ஜெயலலிதா இறந்து விட்டதால் அவருக்கான தண்டனை நீக்கப்படுகிறது.
குற்றம்சாட்டப்பட்ட மற்ற மூவர் மீதான தண்டனை உறுதிப்படுத்தப்படுவதால், அவர்கள் விசாரணை நீதிமன்றத்தில் சரண் அடைந்து மீதமுள்ள தண்டனைக் காலத்தை அனுபவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இவர்களுக்கான மீதமுள்ள தண்டனைக் காலத்தை அறிவிப்பதற்கான நடவடிக்கையை பெங்களூரு தனி நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையே, சசிகலாவுக்கு தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி விரைவில் மனு தாக்கல் செய்யப்படும் என்று அதிமுவைச் சேர்ந்த மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com