ஜெயலலிதா குற்றவாளி என்ற தீர்ப்பு பற்றி ஓ. பன்னீர்செல்வத்தின் கருத்து என்ன? ராமதாஸ் கேள்வி

ஜெயலலிதா குற்றவாளி என்ற தீர்ப்பு பற்றி ஓ. பன்னீர்செல்வத்தின் கருத்து என்ன என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா குற்றவாளி என்ற தீர்ப்பு பற்றி ஓ. பன்னீர்செல்வத்தின் கருத்து என்ன? ராமதாஸ் கேள்வி

ஜெயலலிதா குற்றவாளி என்ற தீர்ப்பு பற்றி ஓ. பன்னீர்செல்வத்தின் கருத்து என்ன என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின் விளைவாக தமிழக அரசியலில் அடுத்தடுத்து பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பு குறித்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இதுவரை கருத்து தெரிவிக்காதது பல ஐயங்களை எழுப்பியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலாவின் பங்கு மற்றும் கூட்டுச்சதி குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள சில அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.‘‘இந்த வழக்கின் எதிரிகள் சசிகலா, இளவரசி, சுகாதரன் ஆகியோரை சமூக வாழ்க்கை வாழ்வதற்காகவோ,  அல்லது மனிதநேய அடிப்படையிலோ தமது போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதா தங்க வைக்க வில்லை. மாறாக, ஜெயலலிதா சொத்துக்களை கையாளுவதற்காக அவர்கள் தீட்டிய சதித்திட்டப் படி தான் போயஸ் தோட்ட இல்லத்தில் சசிகலா உள்ளிட்டோர் தங்க வைக்கப்பட்டனர். தமது சொத்துக்களை கையாளுவதற்கான உரிமையை சசிகலாவுக்கு ஜெயலலிதா அளித்திருப்பது இதை உறுதி செய்கிறது. இதற்கான சதித்திட்டத்தை ஜெயலலிதா தீட்டினர். சசி, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அதை செயல்படுத்த உடந்தையாக இருந்தனர்’’ என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறனர். 

அதாவது ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் அவரது பதவிக் காலத்தில் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி சொத்துக்களைக் குவித்துள்ளார்; அவரின் சதிகளுக்கு உடந்தையாக இருந்தவர்களும் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தத் தீர்ப்பின் மூலம் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த சிறப்பானத் தீர்ப்பு குறித்து இப்போது முதலமைச்சர் பதவியிலுள்ள ஓ.பன்னீர் செல்வம் தான் முதன்முதலில் கருத்து தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், இத்தீர்ப்பின் பக்கவிளைவுகள் குறித்தெல்லாம் கருத்துக் கூறிய முதல்வர் பன்னீர்செல்வம், மக்கள் பணத்தை கொள்ளையடித்ததற்காக ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா? என்பது பற்றி இதுவரை வாய் திறக்காமல் அமைதியாக இருப்பது ஏன்? ஊழல் முதல்வருக்கு வழங்கப்பட்ட தண்டனையை வரவேற்பது தானே நல்ல முதல்வருக்கு அடையாளம்?
அதுமட்டுமின்றி, சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது,‘‘ அம்மாவின் அணுகுமுறை தொடர வேண்டும் என்பதையே சற்று முன் வழங்கப்பட்ட தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது’’ என்று கூறினார். அதன்பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில்,‘‘ அம்மா விட்டுச் சென்ற பணிகளைத் தொடர அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எனக்கு ஆதரவளிக்க வேண்டும்’’ என்று கோரியிருக்கிறார். இதற்கான பொருள் என்ன? என்பதை பன்னீர் செல்வம் தான் விளக்க வேண்டும்.  ஜெயலலிதா ஆட்சி ஊழலாட்சி என்பது நிரூபிக்கப்பட்டு விட்ட நிலையில்,  அவரது அணுகுமுறையை பின்பற்ற வேண்டும், அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர வேண்டும் என்று கூறுவதன் மூலம் ஊழலாட்சி தான் தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறாரா?  என்பதை பன்னீர்செல்வம் விளக்க வேண்டும்.

இவை ஒருபுறமிருக்க இத்தீர்ப்பின் தொடர்ச்சியாக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா இனி குற்றவாளியாகத் தான் பார்க்கப்பட வேண்டுமே தவிர, முன்னாள் முதல்வருக்குரிய மாண்புகளை அனுபவிக்க முடியாது. அவருடைய பிறந்தநாளையும், நினைவு நாளையும் அரசு நிகழ்வுகளாக நடத்துவதோ, அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அரசு செலவில் நினைவிடம் அமைப்பதோ சாத்தியமல்ல. சட்டப்பேரவை மாடத்தில் முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் ஜெயலலிதா உருவப்படத்தை திறக்க இயலாது. அதுமட்டுமின்றி அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவப்படங்கள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை பன்னீர்செல்வம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

வருவாய்க்கு மீறிய வகையில் சேர்க்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்தால் பட்டியலிடப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துக்கள் அனைத்தும் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 452-ஆவது பிரிவின் கீழ் பறிமுதல் செய்யப்பட வேண்டும். இவ்வழக்கை விசாரித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும். அதற்கு தேவையான உதவிகளை கர்நாடக அரசும், தமிழக அரசும் வழங்க வேண்டும். ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அவர் பதவிக்கு வருவதற்கு முன்பே வாங்கப்பட்டது என்ற போதிலும், அதை மேம்படுத்த செலவிடப்பட்ட பல கோடி ரூபாய் ஊழல் பணம் என்பதால் அதுவும் பறிமுதல் செய்யப்பட வேண்டிய சொத்துக்கள் பட்டியலில் இருக்கிறது. எனவே, அதை அரசு சார்ந்த ஜெயலலிதா நினைவிடமாக மாற்றுவது சாத்தியமல்ல. வேண்டுமானால், பன்னீர்செல்வம் போன்றவர்கள் போயஸ்தோட்ட இல்லத்தை ஏலத்தில் எடுத்து தனிப்பட்ட முறையிலான நினைவு இல்லமாக மாற்றலாம்.

பன்னீர்செல்வம் முதல்வராக தொடரும் பட்சத்தில் ஊழலுக்கு எதிரான முதல்வராக செயல்பட்டு,  சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகிறாரா? அல்லது ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் ஊழல் முதல்வராக தொடருவாரா? என்பதை விளக்க வேண்டும். தம்மை நல்லவராகவும், ஜெயலலிதாவின் விசுவாசியாகவும்  காட்டிக்கொண்டு இரட்டைக்குதிரையில் பயணிக்கும் நாடகத்தை நீண்ட நாட்களுக்கு நடத்த முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com