ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா சபதம்; எம்ஜிஆர் இல்லத்தில் தியானம்..!

பெங்களூரு நீதிமன்றத்தில் சரண் அடைவதற்காக செல்லும் வழியில் ஜெயலலிதா நினைவிடம் சென்ற சசிகலா அங்கே அவரது சமாதியில் கையால் அடித்து சபதம் ஏற்றார்.
ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா சபதம்; எம்ஜிஆர் இல்லத்தில் தியானம்..!

சென்னை: பெங்களூரு நீதிமன்றத்தில் சரண் அடைவதற்காக செல்லும் வழியில் ஜெயலலிதா நினைவிடம் சென்ற சசிகலா அங்கே அவரது சமாதியில் கையால் அடித்து சபதம் ஏற்றார்.

ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர்மீதான சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அத்துடன் அவர் பெங்களூரு நீதிமன்ற 48-ஆம் எண் அறையில் ஆஜராக வேண்டும் என்று பதிவாளர் உத்தரவிட்டார்.

அதன் காரணமாக இன்று காலை போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து சசிகலா புறப்பட்டார்.அங்கிருந்து நேராக கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த சென்றார்.  

முதலில் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியவர் பின்னர் குனிந்து ஜெயலலிதாவின் சமாதியில் கையால் இருமுறை அடித்து சத்தியம் செய்தார். பின்னர் நிமிர்ந்து கை கூப்பி வாயில் முணுமுணுத்து பிரார்த்தித்தார். பின்னர் சமாதியை வலம் வந்து வணங்கினார். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.  

அவரது இந்த செயல் அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்களை உணர்ச்சி வசப்பட வைத்தது.

அதற்கு பிறகு அங்கிருந்து ராமாபுரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லத்திற்கு சென்ற சசிகலா அங்குள்ள எம்.ஜி.ஆர் படத்திற்கு முன்பு அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தார். பின்னர் வெளியில் உள்ள அவரது சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com