போயஸ் தோட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு குறைப்பு

போயஸ் தோட்டத்துக்கான போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. இருப்பினும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டதால் வெறிச்சோடிய போயஸ் தோட்ட சாலை.
போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டதால் வெறிச்சோடிய போயஸ் தோட்ட சாலை.

போயஸ் தோட்டத்துக்கான போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. இருப்பினும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அவரது போயஸ் தோட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்படாமல் இருந்ததற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பாதுகாப்பு குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலா சட்டப் பேரவை குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், 3 ஷிப்டுகளாக சுமார் 250 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பை உறுதி செய்தது. தண்டனை பெற்றவருக்கு பாதுகாப்பு வழங்கினால் சட்டச் சிக்கல் ஏற்படும் என்பதால், காவலர்கள் படிப்படியாக குறைக்கப்பட்டனர்.
இதற்கிடையே தீர்ப்பு காரணமாக அந்தப் பகுதியில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்கு தேனாம்பேட்டை காவல் நிலைய போலீஸார் 7 பேர் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முதல்வர் வீட்டுக்கு அதிகரிப்பு: இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு கடந்த சில நாள்களாகவே ஆதரவு தெரிவித்து,ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
இதனால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வந்தது.
தீர்ப்பு வெளியானதும் முதல்வர் வீட்டுக்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. அங்கு முதல்வரை சந்திக்கவும், ஆதரவு தெரிவிக்கவும் வந்தோர் மெட்டல் டிடெக்டரில் இரு இடங்களில் சோதனை செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
முதல்வர் வீட்டில் 20-க்கும் குறைவான காவலர்களே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது வழக்கம். அரசியல் சூழ்நிலையால் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. தீர்ப்புக்கு பின்னர், முதல்வருக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதால், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு, பாதுகாப்பு பிரிவு, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை என பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 300 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com