யாரை அழைக்கப் போகிறார் ஆளுநர்? அரசியல் குழப்பம் நீடிப்பு

யாரை அழைக்கப் போகிறார் ஆளுநர்? அரசியல் குழப்பம் நீடிப்பு

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகிய தரப்பினர் தனித்தனியாக ஆட்சி அமைக்க கோரியுள்ள நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் என்ன முடிவினை எடுக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகிய தரப்பினர் தனித்தனியாக ஆட்சி அமைக்க கோரியுள்ள நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் என்ன முடிவினை எடுக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 5-ஆம் தேதியன்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராஜிநாமா கடிதம் அளித்தார். இதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, சட்டப் பேரவை குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ், மறுநாளே ஏற்றுக் கொண்டு, மாற்று ஏற்பாடுகள் செய்யும் வரை முதல்வராக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.
வழக்கு முடிவு வரும் வரை...: தில்லியிலும், மகாராஷ்டிராவிலும் இருந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், கடந்த 9-ஆம் தேதியன்று சென்னை வந்தார். அன்றைய தினம் மாலை 5 மணிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும், மாலை 7.30 மணிக்கு சசிகலாவையும் சந்தித்தார்.
அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் அளித்த சசிகலா தன்னை ஆட்சி அமைக்க அழைக்கும்படி கேட்டுக் கொண்டார். அதேசமயம், ஓ.பன்னீர்செல்வம் ஆளுநரிடம் கோரிக்கை மனுவை அளித்தார். 5 நாள்கள் கடந்த பிறகும், யாரையும் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவில்லை.
யாரை அழைப்பார்? சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகே ஆட்சி அமைக்கும் விஷயத்தில் ஆளுநர் முடிவெடுப்பார் என செய்திகள் வெளியாகின. அதன்படியே, சொத்துக் குவிப்பு வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அதிமுக சட்டப் பேரவைக் குழுத் தலைவராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் அளித்த ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் செவ்வாய்க்கிழமை மாலை அளித்த பழனிசாமி, தனது தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் சந்தித்துப் பேசினர். ஆனால், ஆட்சி அமைக்க உடனடியாக யாரையும் அவர் அழைக்கவில்லை. இதனால், கடந்த 5-ஆம் தேதி ஏற்பட்ட அரசியல் சிக்கல்களுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. அரசியல் குழப்பங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் சட்டப் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியிலேயே தங்கியுள்ளனர். ஆளுநர் யாரையும் ஆட்சி அமைக்க அழைக்காத சூழலில் குழப்பங்கள் தொடர்கின்றன.
ஆளுநருக்கான வாய்ப்புகள் என்ன? ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு தற்போது இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. ஒன்று, தன்னை மிரட்டி ராஜிநாமா வாங்கியதாக புகார் கூறப்பட்டதால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை முதலில் அழைத்து சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அழைக்கலாம்.
இரண்டாவதாக, பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுக் கடிதங்களை அளித்துள்ள எடப்பாடி கே.பழனிசாமியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து, பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லலாம். இந்த இரண்டு வாய்ப்புகளில் ஒன்றையே ஆளுநர் தேர்ந்தெடுக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com