ஆளுநர் இனியும் காலம் தாழ்த்துவது நியாயமாக இருக்காது

தமிழகத்தில் நிலையான அரசை அமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் இனியும் காலம் தாழ்த்துவது நியாயமாக இருக்காது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.
ஆளுநர் இனியும் காலம் தாழ்த்துவது நியாயமாக இருக்காது

தமிழகத்தில் நிலையான அரசை அமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் இனியும் காலம் தாழ்த்துவது நியாயமாக இருக்காது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தாழ்த்தப்பட்டோர் பிரிவின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் புதன்கிழமை (பிப்.15) நடைபெற்றது.
சு.திருநாவுக்கரசர் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தாழ்த்தப்பட்டோர் பிரிவின் தலைவர் கே.ராஜூ, ஒருங்கிணைப்பாளர் மஞ்சுநாத், தமிழ்நாடு காங்கிரஸ் தாழ்த்தப்பட்டோர் பிரிவின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் சு.திருநாவுக்கரசர் பேசியதாவது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து தமிழக அரசின் செயல்பாடு முற்றிலும் முடங்கியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது வரவேற்கத்தக்கது.
தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகள் முலம் பாஜக தலைமையிலான மத்திய அரசு தனது அதிகார பலத்தை ஆளுநர் மூலம் செயல்படுத்த முயல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை ஆளுநர் உடனடியாகக் கூட்ட வேண்டும்.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒரு தரப்போ, மற்றொரு தரப்போ தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதாகக் கூறுவதை நிரூபிப்பதற்காக ஆளுநர் இதைச் செய்ய வேண்டும். சிறப்பு பேரவைக் கூட்டத்தைக் கூட்டுவதில் இருந்து ஆளுநர் நழுவிச் செல்வது ஏன்? தமிழகத்தில் ஒரு நிலையான அரசு அமைவது மிக முக்கியம். யாருக்குப் பெரும்பான்மை பலம் உள்ளது என்பதை அறிவதற்காக சட்டப் பேரவையின் சிறப்பு கூட்டத் தொடரை ஆளுநர் உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com