சசிகலா, இளவரசி, சுதாகரன் பெங்களூரு சிறையில் அடைப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை இறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலர் வி.கே. சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன்
பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைவதற்காக புதன்கிழமை காரில் வந்த அதிமுக பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா.
பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைவதற்காக புதன்கிழமை காரில் வந்த அதிமுக பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை இறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலர் வி.கே. சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் புதன்கிழமை மாலை சரணடைந்தனர்.
இவர்கள் மூவரையும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு சிறையில் அடைத்து நீதிபதி அஸ்வத் நாராயணா உத்தரவிட்டார்.
வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த தீர்ப்பை உறுதிசெய்து செவ்வாய்க்கிழமை காலை உத்தரவிட்டது.
மூவரும் உடனடியாக பெங்களூரிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் புதன்கிழமை மாலை 5.15 மணிக்கு வந்தனர். 15 நிமிடங்கள் கழித்து சிறப்பு நீதிபதி அஸ்வத் நாராயணா வந்தார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு விவரம் தெரியுமா? என இருவரிடமும் நீதிபதி கேட்டார். தெரியும் என இருவரும் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்களிடம் சரணடைவதற்கான படிவங்கள் வழங்கப்பட்டன.
படிவங்களை நிரப்பி அளித்த இருவரையும் இதே வளாகத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார் நீதிபதி.
மருத்துவப் பரிசோதனையின் முடிவில், இருவரும் தங்களது உறவினர்களை சந்தித்துப் பேச அனுமதி கோரினர். நீதிபதி அனுமதி அளித்ததை அடுத்து, சிறை வளாகத்தில் இருந்த சசிகலாவின் கணவர் எம். நடராஜன், அண்ணன் பழனியப்பன், சுந்தரவதனத்தின் மகன் டாக்டர் வெங்கடேஷ் மற்றும் இளவரசியின் மருமகன்கள், மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை ஆகியோருடன் இருவரும் சுமார் 15 நிமிஷங்கள் கண் கலங்கியவாறே பேசினர்.
தொடர்ந்து மீண்டும் நீதிபதியின் அறைக்குச் சென்ற இருவரும், தங்களுக்கு அடுத்த இரு வாரங்களுக்கு சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரினர். இதற்கு நீதிபதி ஒப்புக் கொள்ளவில்லை. சசிகலா தனக்கு முதல் வகுப்பும், தனி மருத்துவர் வசதியும் அளிக்கக் கோரினார். ஏற்கெனவே இதே வழக்கில் சிறையில் இருந்தபோது, முதல் வகுப்பு அளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். தனி மருத்துவர் வசதி அளிக்க இயலாது, தங்களுக்குத் தேவையான மருத்துவ வசதி சிறை வளாகத்திலுள்ள அரசு மருத்துவமனையிலிருந்து அளிக்கப்படும் என்றார் நீதிபதி. மேலும், ஏற்கெனவே முதல் வகுப்பு பெற்றிருந்தால், அதுகுறித்து சிறைக் கண்காணிப்பாளரிடம் கோரிப் பெறலாம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
அதேபோல, வீட்டு உணவு பெற்றுக் கொள்வதற்கும் இருவருக்கும் அனுமதி அளிக்கவில்லை. இவற்றைத் தொடர்ந்து இருவரையும் சிறையில் அடைப்பதற்கான ஆவணங்களை பெண் காவலர்களிடம் நீதிபதி அஸ்வத் நாராயணா வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக இருவரும் இதே வளாகத்திலுள்ள பெண்கள் சிறைக்கு மாலை 6.30 மணிக்கு அனுப்பப்பட்டனர்.
சுதாகரன் சரண்: இந்த நிலையில், மாலை 6.37 மணிக்கு சுதாகரன் சிறப்பு நீதிமன்றத்துக்குள் வந்தார். ஏன் தாமதம்? என நீதிபதி கேட்டதற்கு, பெங்களூரு நகருக்குள் வழி தெரியாமல் தாமதமானதாக சுதாகரன் தெரிவித்தார்.
மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட வழக்கமான நடைமுறைகளுக்குப் பிறகு மாலை 6.50 மணிக்கு சுதாகரனும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கைதி எண்கள்: சசிகலா, இளவரசி ஆகியோருக்கு பெண்கள் சிறைக்குள் 3 கைதிகள் தங்கும் அறையில் தனித்தனி அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதாவது இவர்கள் ஒவ்வொருவருடனும் 2 பேர் இருப்பார்கள்.
சசிகலாவுக்கு கைதி எண்: 9234, இளவரசிக்கு கைதி எண்: 9235, சுதாகரனுக்கு கைதி எண்: 9236 வழங்கப்பட்டுள்ளது.
இப்போதைக்கு இவர்களுக்கு இரண்டாம் வகுப்பு அறைகளே வழங்கப்பட்டுள்ளன. மின்விசிறி, தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படவில்லை, கட்டில் மட்டும் வழங்கப்படும் என சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com