சிறைக்கு வெளியே மோதல்: தமிழகப் பதிவெண் கொண்ட வாகனங்கள் உடைப்பு

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் புதன்கிழமை மாலை சரணடைய வந்தபோது, சிறைக்கு வெளியே ஏற்பட்ட மோதலில், தமிழகப் பதிவெண் கொண்ட 7 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் புதன்கிழமை சேதப்படுத்தப்பட்ட சசிகலாவுடன் வந்த தமிழக பதிவு எண் கொண்ட வாகனம்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் புதன்கிழமை சேதப்படுத்தப்பட்ட சசிகலாவுடன் வந்த தமிழக பதிவு எண் கொண்ட வாகனம்.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் புதன்கிழமை மாலை சரணடைய வந்தபோது, சிறைக்கு வெளியே ஏற்பட்ட மோதலில், தமிழகப் பதிவெண் கொண்ட 7 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய வந்தபோது, கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் இருந்து கன்னடத் தொலைக்காட்சியைச் சேர்ந்த ஒளிப்பதிவுக் குழுவினர் காரில் பின்தொடர்ந்தனர்.
அப்போது, சசிகலாவுடன் வந்த தமிழக வாகனமும், கன்னடத் தொலைக்காட்சிக் குழுவினரின் வாகனமும் லேசாக உரசியதாகத் தெரிகிறது. இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் சமாதானமாகச் சென்றுள்ளனர்.
ஆனால், சிறிது நேரம் கழித்து சிறைக்கு வெளியே இருந்த தமிழகப் பதிவெண் கொண்ட 7 வாகனங்களை உள்ளூர்க்காரர்கள் திரண்டு தாக்கினர். இதில் 3 கார்களின் கண்ணாடிகள் முற்றிலுமாக நொறுங்கின.
தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியதால், சிறைக்கு வெளியே குவிக்கப்பட்டிருந்த போலீஸார், லேசான தடியடி நடத்தினர். இதில் ஒரு பத்திரிகையாளர் உள்பட 3 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து சிறிது நேரம் பதற்றம் தணியவில்லை.
அதிமுகவினரிடையே வாக்குவாதம்: சிறைக்கு வெளியே அதிமுகவினர் சுமார் 200 பேர் திரண்டிருந்தனர். இவர்களில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினரும் இருந்ததாகத் தெரிகிறது. இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
"தைரியமாக இருங்கள்': சசிகலா - சிறையில் அடைக்கும் நடைமுறைக்கு முன்பாக உறவினர்களைச் சந்திக்க நீதிபதியிடம் இருவரும் அனுமதி பெற்றனர். உறவினர்களும் சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் சுமார் 15 நிமிஷங்கள் கண் கலங்கியவாறே பேசினர்.
இதைத் தொடர்ந்து மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை மற்றும் எம். நடராஜன் ஆகியோரிடம், "எனக்கென்று தனி மரியாதை இருக்கிறது. அழாதீர்கள், தைரியமாக இருங்கள்' எனத் தெரிவித்து உள்ளே சென்றார் சசிகலா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com