தாமிரவருணி ஆற்றிலிருந்து குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுக்க தடை கோரிய வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

தாமிரவருணி ஆற்றிலிருந்து குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்கத் தடை கோரிய வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

தாமிரவருணி ஆற்றிலிருந்து குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்கத் தடை கோரிய வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் குளிர்பான ஆலைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குளிர்பானம் தயாரிப்பதற்காக, தாமிரவருணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் நீராதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, தாமிரவருணியில் இருந்து இந்நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க தடை விதிக்கக் கோரி, திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, பாளையங்கோட்டையைச் சேர்ந்த பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு செய்திருந்தனர்.
இந்த மனுக்கள், நீதிபதிகள் ஏ. செல்வம், பி. கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வழக்குரைஞர்கள் வாதிடுகையில், வணிகப் பயன்பாட்டுக்குத் தண்ணீரை விற்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறும் வகையில், தாமிரவருணியின் தண்ணீர் விற்கப்படுகிறது. நாங்குநேரி பகுதியில் தண்ணீர் அதிகம் தேவைப்படும் வாழை, தென்னை விவசாயம் நடைபெறுகிறது. இதற்கு, அப்பகுதி விவசாயிகள் தாமிரவருணி ஆற்றையே நம்பி இருக்கின்றனர்.
குளிர்பான ஆலைக்கு தண்ணீர் விற்கப்படுவதால், போதிய நீராதாரம் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்படுகிறது. மேலும், சிப்காட் தொழிற்பேட்டை அருகே மான்கள் சரணாலயமும் அமைந்துள்ளது. குளிர்பான ஆலைகளால் சரணாலயத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்றனர்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, குளிர்பான நிறுவனங்கள் தரப்பு வழக்குரைஞர்கள் வாதிடுகையில், சிப்காட் தொழிற்பேட்டையில் பல தொழிற்சாலைகள் உள்ளன. அவை அனைத்துக்கும் தாமிரவருணியில் இருந்துதான் தண்ணீர் அளிக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலைகளில், குளிர்பான ஆலைகளைக் காட்டிலும் அதிகளவு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், குளிர்பான நிறுவனங்களை எதிர்த்து மட்டுமே வழக்குத் தொடர்ந்துள்ளனர் என்றனர்.
இதையடுத்து, குளிர்பான நிறுவனங்களை மட்டும் எதிர்ப்பது ஏன்? என்று மனுதாரர்களின் வழக்குரைஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்கள், குளிர்பானத் தொழிற்சாலைகளால் மட்டுமே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கேரளத்தில் கூட, சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக குளிர்பான ஆலை மூடப்பட்டது என்றனர்.
இதுகுறித்து அரசு வழக்குரைஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர், அதற்கு அவர், தாமிரவருணி ஆற்றில் இருந்து உபரி நீரை எடுக்கவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை மார்ச் மாதம் 2ஆம் தேதி வழங்குவதாகக் கூறி ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com