நீதியின் வெற்றி கொண்டாடுவதற்கல்ல; கடைப்பிடிக்க: ஸ்டாலினின் பொறுப்பான கடிதம்

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதியின் வெற்றி கொண்டாடுவதற்கல்ல; அனைவரும் கடைப்பிடிக்க என்று மு.க. ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நீதியின் வெற்றி கொண்டாடுவதற்கல்ல; கடைப்பிடிக்க: ஸ்டாலினின் பொறுப்பான கடிதம்


சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் நீதியின் வெற்றி கொண்டாடுவதற்கல்ல; அனைவரும் கடைப்பிடிக்க என்று மு.க. ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 21 ஆண்டுகள் நடந்த சட்டப் போராட்டத்திற்குப் பிறகு ஜெயலலிதா,  சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு ஊழல் வழக்கில்,  உச்சநீதிமன்றத்தின் வாயிலாக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. பொதுவாழ்வில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வெளிவந்திருக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு, தமிழக அரசியலில் நேர்மையை நிலைநாட்டும் வகையிலான வரலாற்று சிறப்பு மிகுந்த தீர்ப்பாக அமைந்திருக்கிறது. ஆனால் இந்த தீர்ப்பு வெளிவருவதற்கு முன்பு இந்திய திருநாட்டில் வேறு எந்த ஊழல் வழக்கும் சந்திக்காத அனைத்து வகையான தடைகளையும் வழக்கில் இப்போது தண்டனைக்கு உள்ளாகியிருப்பவர்கள் எப்படியெல்லாம் உருவாக்கினார்கள் என்பதை யாரும் மறக்க முடியாது.
 
தர்மத்தை நிலைநாட்ட திமுக சார்பில், கழக பொதுச் செயலாளர் அன்பழகன் தொடுத்த சட்ட யுத்தத்தின் விளைவாகத் தான் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை, பல கட்டப் போராட்டங்களுக்கு இடையேயும், பல்வேறு பிரச்சினைகளைத் தாண்டியும் நியாயமாக நடைபெற்று, நீதியை நிலைநாட்டும் தீர்ப்பு வரை வந்தது. சிறப்பு நீதின்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் இப்போது உறுதி செய்து நீதியை உறுதிப்படுத்தியிருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

 தமிழகத்தில் 7 வருடம், கர்நாடக மாநிலத்தில் 14 வருடம் என்று ஆக மொத்தம் 21 வருடங்கள் கழித்து இறுதி தீர்ப்பு இப்போது வெளிவந்திருக்கிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இத்தனை ஆண்டுகாலம் எப்படி இந்த வழக்கை மேலும் கீழுமாக இழுத்தடித்திருப்பார்கள் என்பதை பட்டியலிட்டால் இந்த வழக்கிற்காக மட்டுமே ஆண்டு முழுவதும் கடிதங்களை எழுத முடியும். அத்தனை வாய்தாக்கள், தடைகள், குழப்பங்கள், மிரட்டல்கள் என்று அத்தனைவகை யுக்திகளையும் தந்திரங்களையும்  இந்த ஊழல் வழக்கில் தீர்ப்பு வந்து விடக்கூடாது என்பதற்காக குற்றம்சாட்டப்பட்டோர் பயன்படுத்தினார்கள்.

 பல்வேறு தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து தான் உச்சநீதிமன்றம் இப்போது இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

 
இந்த தீர்ப்பிற்கு அடிப்படை ஆதாரம் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்து தற்போது கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாகியிருக்கும் ஜான் மைக்கேல் டி. குன்ஹா அவர்களின் ஆய்வுப்பூர்வமான அரியவகைத் தீர்ப்பு தான்.

குன்ஹா அவர்களின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு நீதிபதி குமாரசாமி பிழையான கணக்கு மூலம் 11.5.2015 அன்று விடுதலை பெற்றார்கள். இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக மாநில அரசு செய்த மேல்முறையீட்டில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு குன்ஹா அவர்கள் அளித்த தீர்ப்பை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளது உச்சநீதிமன்றம். நீதிபதி குமாரசாமி கணக்குப்படி 8.12 சதவீதம் மட்டுமே வருமானத்திற்கு மீறிய சொத்து என்று கூறினார். உச்சநீதிமன்றம் வருமானத்திற்கு மீறிய சொத்து 211.09 சதவீதம் என்று தீர்ப்பளித்து குன்ஹா தீர்ப்பை உறுதி செய்திருக்கிறது.

இப்போது வெளிவந்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பில் நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமிதாவ் ராய் ஆகியோர் இந்த ஊழல் வழக்கு பற்றி பல்வேறு விஷயங்களை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அவற்றுள் சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

 
-    மறைந்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 53 கோடியே 60 லட்சகத்து 49 ஆயிரத்து 954 ரூபாய் வருமானத்திற்கு மீறிய சொத்து குவித்துள்ளார்கள்.

 -  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் மற்ற மூவரும் கூட்டுச் சதி செய்துள்ளார்கள். வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை அவருக்காக வாங்கி குவித்திருந்தார்கள்.

 -   ஒரே முகவரியில் (36, போயஸ்கார்டன்) இவர்கள் எல்லாம் குடியிருந்ததது தர்ம காரியங்கள் செய்வதற்காக அல்ல. வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பதற்காகவே.

 -     முதல் குற்றவாளிக்கு (மறைந்த முதலமைச்சர்) இரண்டாவது குற்றவாளி (சசிகலா) ஏஜெண்டாக செயல்பட்டுள்ளார்.

 -  இவர்களுக்குள் நடைபெற்றுள்ள வங்கிக் கணக்கின் பண பரிமாற்றங்கள், கணக்கில் வராத ரொக்க டெபாசிட்டுகள் எல்லாம் 36, போயஸ் கார்டனிலிருந்து தான் வந்திருக்கிறது.

 - சொத்துக்கள் வாங்குவதற்கான முதலீடு முதல் குற்றவாளியிடமிருந்து தான் வந்திருக்கிறது. ஆகவே இரண்டாவது, மூன்றாவது, நான்காவது குற்றவாளிகள் பெயரில் உள்ள சொத்துக்கள் முதல் குற்றவாளியின் பணத்தில் வந்திருக்கிறது.

 -   மொத்தமுள்ள 34 கம்பெனிகளில், 1991- 1996-க்குள் திடீரென்று 23 கம்பெனிகள் பதிவு செய்யப்பட்டன. ஒரே நாளில் பத்து கம்பெனிகள் பதிவு செய்தார்கள். இந்த கம்பெனிகளுக்கு மூலதனம் இல்லை. பிஸினஸ் இல்லை. லாபமும் இல்லை. ஆனால் டெபாசிட்டுகள் மட்டும் போடப்படுகிறது. ஒரு சில கம்பெனிகளில் 300 ஏக்கர் நிலம் வரை வாங்கி குவிக்கப்பட்டது. வருமானத்திற்கு மீறிய பணத்திற்காகவே இந்த நிறுவங்கள் துவங்கப்பட்டிருக்கிறது எல்லாம் 36,போயஸ் கார்டன் முகவரி என்பது "கூட்டுச் சதியை" நிரூபிக்கிறது.

 -    இந்த கம்பெனிகள் பற்றி எனக்குத் தெரியாது என்று முதல் குற்றவாளி சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் 2 முதல் 4 ஆவது குற்றவாளி வரை அனைவரும் முதல் குற்றவாளியின் வீட்டில் தான் தங்கியிருக்கிறார்கள்.

 -  முதல் குற்றவாளி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிப்பு செய்துள்ளார். அந்த சட்டவிரோத வருமானத்தை இரண்டாம், மூன்றாம், நான்காம் குற்றவாளிகள் என்ற "முகமூடி அணி" (masked front) மூலம் கொடுத்து நிறுவனங்களாகவும், கம்பெனிகளாகவும் சொத்துக்கள் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ளது.

-    குற்றவாளிகளின் சொத்துக்களை மதிப்பிடுவதில் பெங்களூர் விசாரணை நீதிமன்றம் (நீதிபதி குன்ஹாவின் நீதிமன்றம்) மிகுந்த கவனத்துடனும், விழிப்புணர்வுடனும், நியாயமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. தங்க மற்றும் வைர நகைகள், சேலைகள், திருமண செலவுகள் (வளர்ப்பு மகன் திருமணம்) அனைத்திலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான நடைமுறையை விசாரணை நீதிமன்றம் கடைப்பிடித்துள்ளது.

 - பொது ஊழியர்கள் நன்கொடை என்ற பெயரில் பணம் பெறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

 -  வருமான வரி கணக்கு தாக்கல் செய்து விட்டால் அந்த வருமானம் சட்டபூர்வமான வருமானமாகி விடாது.

 -    குற்றம்சாட்டப்பட்டுள்ள நால்வர் மீதான "கூட்டுச் சதி" என்ற குற்றச்சாட்டை சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா மிகவும் துல்லியமாக நிரூபித்துள்ளார்.

 - கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி ஆதாரங்கள் இன்றியும், சாட்சியங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும் தீர்ப்பளித்தது தவறு.

 -   சொத்துக்குவிக்க வேண்டும் என்பதற்காக ஆழமான கூட்டுச் சதித் திட்டம் உருவாக்கப்பட்டு சட்டவிரோத வருமானத்தையும், சொத்து குவிப்பையும் மறைப்பதற்கும், ஏமாற்றுவதற்கும் "வெற்று" கம்பெனிகள் (shell companies) மனஉறுத்தல் ஏதுமின்றி உருவாக்கப்பட்டுள்ளன. இதற்காக கடைப்பிடிக்கப்பட்டுள்ள "விந்தையான" வழிமுறைகள் திடுக்கிட வைக்கிறது.

இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள 570 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா அவர்கள் அளித்த 1135 பக்கங்கள் அடங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை உறுதி செய்திருக்கிறது. ஊழல் குற்றவாளிகள் தப்பி விடக்கூடாது என்ற சீரிய நோக்கில் இந்த வழக்கில் பல சிரமங்களையும், தொல்லைகளையும், பழி வாங்கும் நடவடிக்கைகளையும் தாங்கிக் கொண்டு பணியாற்றிய லஞ்ச ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகளுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வழக்கை திசை திருப்ப அதிமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் ஒத்துழைத்த அதிகாரிகள் இனிமேலாவது தங்கள் கடமை தவறாமல் செயல்படும் வகையில் திருந்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

 அரசியலுக்கு வருவோர் மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையுடன் நேர்மையுடன் செயல்பட முன்வர வேண்டும் என்பதற்கும், ஊழல் செய்து சொத்துக்குவிப்பில் ஈடுபட்டு பேராசைக்காரர்களாக இருக்கக் கூடாது என்பதற்கும் இந்த தீர்ப்பின் மூலம் மிகச்சிறந்த பாடத்தை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. ஊழல் என்ற ஊற்றுக் கண் பொருளாதாரம் என்ற ஜீவநதியை சீரழித்து விடும் என்பதற்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மிகச் சிறந்த முன்னுதாரணமாக மட்டுமல்ல - எச்சரிக்கையாகவும் அமைந்திருக்கிறது. நாளைய சமுதாயமும், நாடும் முன்னேற இந்த தீர்ப்பின் வாசகங்களை ஒவ்வொரு அரசியல் தலைவரும், பொதுவாழ்வில் இருப்போரும், பொது வாழ்விற்கு வருவோரும் உற்று நோக்க வேண்டும்.

திமுக தலைவர் வழிகாட்டுதல்படி, பொதுச்செயலாளர் பேராசிரியர் நடத்திய சட்டப் போரில் கிடைத்துள்ள இந்த வெற்றி கொண்டாடுவதற்கானதல்ல. பொதுவாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறை நெறிகளுக்கானது என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட்டு தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்ப்போம் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com