பி.எஸ்.எல்.வி. சி - 37 ராக்கெட்: திருநாவுக்கரசர், ஜி.கே.வாசன் வாழ்த்து

பி.எஸ்.எல்.வி - சி 37 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய தேசிய லீக் கட்சியின்

பி.எஸ்.எல்.வி - சி 37 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய தேசிய லீக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஜி.கே.நிஜாமுதீன் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
சு.திருநாவுக்கரசர்: ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி இந்தியா உலக சாதனை படைத்துள்ளது. அறிவியல் துறையில் உலக நாடுகளுக்கு இணையான பாதையை வகுக்க வேண்டுமென்று, அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு இஸ்ரோ நிறுவனத்தை 1962-ஆம் ஆண்டு நிறுவினார்.
விண்வெளித் துறையில் இந்தியா உலக சாதனை படைத்துள்ள இந்த நேரத்தில் இதைக் குறிப்பிட விரும்புகிறேன். இதற்கு அரும்பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் வாழ்த்துகள்.
ஜி.கே.வாசன்: ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி - சி 37 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு, செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளன. 2014-ஆம் ஆண்டில் ரஷியா 37 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியதுதான் உலக சாதனையாக இருந்தது. இப்போது இந்தியா அந்தச் சாதனையை முறியடித்து, 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை நிகழ்த்தியுள்ளது. பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகள்.
நிஜாமுதீன்: விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டில் வெளிநாடுகளைச் சார்ந்த 101 நானோ செயற்கைக்கோள்களும், 3 இந்திய செயற்கைகோள்களும் இடம் பெற்றுள்ளன.
இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாகப் படம் பிடிக்க உதவும் மூன்று அதிநவீன கேமராக்கள் அதில் பொருத்தப்பட்டுள்ளன. விஞ்ஞான வரலாற்றில் உலக சாதனை படைத்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com