முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்வு: கொங்குமண்டலத்தின் விசுவாசத்துக்குக் கிடைத்த பரிசு

அதிமுக பொதுச் செயலர் சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்றதால், அவரது முதல்வர் கனவு நனவாகாமலேயே போனது.
முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்வு: கொங்குமண்டலத்தின் விசுவாசத்துக்குக் கிடைத்த பரிசு


சென்னை: அதிமுக பொதுச் செயலர் சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்றதால், அவரது முதல்வர் கனவு நனவாகாமலேயே போனது.

ஆனால், அந்த இக்கட்டான சூழ்நிலையில், ஜெயலலிதா பெரிதும் நம்பி வந்த பன்னீர்செல்வமே இன்று தனி அணியாக பிரிந்த சூழ்நிலையில், அதிமுகவுக்குள் புதிய முதல்வரைத் தேடும் பணி சசிகலாவுக்கு சற்று கடினமாகவே இருந்திருக்கலாம்.

ஆனால், அந்த கடினமான பணியை சசிகலா மிகச்சரியாகவே செய்திருக்கிறார் என்று சொல்லும்படி எடப்பாடி பழனிசாமியின் தேர்வு அமைந்திருக்கிறது என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் கே. பழனிசாமி. இவருக்கு வயது 62. இவர் அதிமுகவின் மூத்த தலைவர் மற்றும் அதிகாரம் மிக்கத் தலைவராகவும் திகழ்ந்தவர்.

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பழனிசாமி, சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் நுழைந்தார். சரியாக, எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, ஜானகி, ஜெயலலிதா என அதிமுக இரு அணிகளாக பிரிந்த நேரம் அது.

இளைஞராக இருந்த பழனிசாமி, ஜெயலலிதா அணியில் இடம்பிடித்தார். எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். தொடர்ந்து 2016 வரை அவரது வெற்றி தொடர்ந்தது.

2016ம் ஆண்டு அவர் வெற்றி பெற்று அமைச்சரவையில் நுழையும் போது, ஜெயலலிதாவின் முக்கியத் தளபதிகள் என்ற பன்னீர்செல்வம் உட்பட 4 பேர் கொண்ட அணியில் பழனிசாமி இடம்பிடித்தார். அப்போது அமைச்சரவையின் 3வது அதிகாரம் கொண்ட அமைச்சராக பழனிசாமி விளங்கினார்.

அமைச்சரவை பட்டியல் அடிப்படையில் பழனிசாமி 3வது இடத்தில் இருந்தாலும், திண்டுக்கல் சீனிவாசனை விட, பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, சிறு துறைமுக அமைச்சரவை ஆகியவற்றை வகித்து வந்ததால், துறை அடிப்படையிலும், அதிகாரத்தை ஒப்பிடுகையிலும் இவர் பன்னீர்செல்வத்துக்கு அடுத்த இடத்தில் இருந்ததாகவே கருதப்படட்து.

அதே சமயம், சசிகலாவின் தளபதிகள் என்ற பட்டியலில் இடம்பிடித்தருந்த மின்சாரத் துறை அமைச்சர் பி. தங்கமணி, பழனிசாமியின் உறவினர். இதுவும் ஒரு பலமாக ஆனது.

தமிழக அரசியலில், கொங்கு மண்டல தலைவர்களின் ஆதிக்கமும், அதன் மூலம் அவர்கள் அதிமுக அரசுக்கு அளித்த வெற்றி பலமும், இரண்டு தரப்புக்கும் நன்றாகவே உதவியது. அதே சமயம், கட்சியின் மூத்த தலைவர் மதுசூதனனுக்கு பதிலாக கே.ஏ. செங்கோட்டையன் கட்சியின் முக்கியப் பதவிக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறார். அவரும் கௌண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவ்வாறு தொடர்ந்து கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தலைவர்களின் தீவிர விசுவாசத்துக்குக் கிடைத்த பரிசாகவே, எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் கருத்து நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com