மேகதாது அணைக்கு கர்நாடகம் ஒப்புதல்: மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது! அன்புமணி ராமதாஸ்

மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணைக்கு கர்நாடகம் ஒப்புதல்: மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது! அன்புமணி ராமதாஸ்

மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கர்நாடக மாநிலம் ராமநகரம் மாவட்டத்தில் கனகபுரம் மற்றும் மேகதாது பகுதியில் ரூ.5912 கோடி செலவில் புதிய அணை கட்டும் திட்டத்திற்கு கர்நாடக அமைச்சரவை நேற்று கொள்கை அடிப்படையில் ஒப்புதல் அளித்திருக்கிறது. நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிரான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

மேகதாது அணைத் திட்டத்திற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதைத் தொடர்ந்து மத்திய அரசின் அனுமதிக்காக மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய நீர்வள ஆணையம், உச்சநீதிமன்ற ஆணைப்படி அமைக்கப்பட்ட மேற்பார்வைக்குழு ஆகியவற்றிடம் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கர்நாடக சட்ட அமைச்சர் டி.பி. ஜெயச்சந்திரா தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தால் கர்நாடக அரசு உடனடியாக கட்டுமானப் பணிகளை தொடங்கிவிடும். அடுத்த சில ஆண்டுகளில் பணிகள் முடிவடைந்து மேகதாது அணை தண்ணீரை தேக்குவதற்கு வாய்ப்புள்ளது.

புதிய அணையில் 66 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். மேகதாது அணை முதலில் 48 டி.எம்.சி  கொள்ளளவு கொண்டதாக இருக்கும் என்று கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து அணையின் கொள்ளளவு 60 டி.எம்.சியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவற்றையெல்லாம் விஞ்சும் வகையில் இப்போது 66 டி.எம்.சி. கொள்ளளவுள்ள அணையை  கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டிருக்கிறது. இது தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

49 டி.எம்.சி கொள்ளவுள்ள கிருஷ்ண ராஜசாகர் அணை மட்டுமே இருக்கும் காலத்திலேயே தமிழகத்திற்கு உரிய அளவுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதில்லை. அவ்வாறு இருக்கும் போது அதைவிட அதிகமாக 66 டி.எம்.சி தண்ணீரை தேக்கிவைக்கும் அளவுக்கு புதிய அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கு ஒரு சொட்டுக் கூட தண்ணீர் கிடைக்காது. அதன்பின் காவிரி ஆறு இன்னொரு பாலாறாக மாறி, தஞ்சை பாசன பகுதிகள் பாலைவனமாக மாறிவிடக்கூடும். கடந்த ஆண்டில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் சேர்ந்த நீரில் 80 விழுக்காட்டுக்கும் கூடுதலான தண்ணீரை கர்நாடகமே பயன்படுத்திக் கொண்டது. அதனால், கடந்த ஆண்டு தமிழகத்தில் குறுவை, சம்பா ஆகிய இருபோக பயிர்களும் பாதிக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் 275&க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை என்பது தொடர்கதையாகிவிடும் ஆபத்துள்ளது.

காவிரி நீர்ப்பகிர்வு தொடர்பாக செய்து கொண்ட ஒப்பந்தங்களின்படியும், நடுவர் மன்றத் தீர்ப்பின்படியும்  தமிழகத்தின் அனுமதி பெறாமல் கர்நாடக அரசு காவிரியில் புதிய அணை கட்டக்கூடாது. ஆனால், கடந்த காலங்களில் தமிழகத்தின் அனுமதி பெறாமல் 4 அணைகளை கட்டிய கர்நாடக அரசு இப்போது ஐந்தாவது அணையை கட்டத் தயாராகி வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் காவிரி ஆறு முழுக்க முழுக்க கர்நாடகத்தின் சொத்தாகி விடும். தமிழகமோ காவிரி உபரி நீர் மற்றும் கழிவுகளை  திறந்து விடுவதற்கான கழிவு நீர் சாக்கடையாக மாறி விடும். இதை மத்திய அரசு தடுக்க வேண்டும்.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வள அமைச்சர் உமாபாரதி கடந்த 09.06.2015 அன்று எனக்கு எழுதிய கடிதத்தில் மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு எப்போது தாக்கல் செய்தாலும், தமிழக அரசின் ஒப்புதல் பெறப்படாத பட்சத்தில் அதற்கு தமது அரசு அனுமதி அளிக்காது என கூறியிருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடகம் எப்போது தாக்கல் செய்தாலும் அதை மத்திய நீர்வள அமைச்சகமும், சுற்றுச்சூழல் அமைச்சகமும் நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் 5 கோடி மக்களின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக திகழும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது. இதற்காக எந்த தியாகத்தையும் செய்வதற்கு பா.ம.க. தயாராக இருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக காவிரி சார்ந்த அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வாக கருதப்படும் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com