விடைபெறுகிறார் தலைமை நீதிபதி எஸ்.கே. கௌல்: இன்று பிரிவு உபசார விழா

உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கவிருக்கும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல் வியாழக்கிழமை விடைபெறுகிறார்.
விடைபெறுகிறார் தலைமை நீதிபதி எஸ்.கே. கௌல்: இன்று பிரிவு உபசார விழா

உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கவிருக்கும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல் வியாழக்கிழமை விடைபெறுகிறார்.
நீதிபதிகள் மற்றும் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சார்பில் அவருக்கு வியாழக்கிழமை பிரிவு உபசார விழா நடத்தப்படுகிறது.
கடந்த 2014-ஆம் ஆண்டு, ஜூலை 26-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் நீதிபதி எஸ்.கே.கௌல். அன்றைய தினம் முதல், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்தியது உள்ளிட்ட பல்வேறு சீர்த்திருத்தங்களை அவர் மேற்கொண்டார்.
அதேபோன்று, உயர்நீதிமன்றத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு(சிஐஎஸ்எப்), அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்ட படைப்பாளிகளின் கருத்துரிமை, பேச்சுரிமையை பாதுகாக்கும் வகையில், எழுத்தாளர் பெருமாள் முருகனின் "மாதொரு பாகன்' நூலுக்கு தடை விதிக்க மறுப்பு, அங்கீகாரமில்லா விளை நிலங்களை வீட்டு மனைகளாக பத்திரப்பதிவு செய்ய தடை, டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் 11 பேரின் நியமனம் செல்லாது உள்ளிட்ட பல முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், கொலிஜியம் பரிந்துரை செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமன பட்டியலில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கௌலும் இடம்பெற்றுள்ளார். இதற்கான ஒப்புதலை குடியரசு தலைவர் வழங்கியதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதியாக, தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல் வெள்ளிக்கிழமை பதவியேற்பார் எனத் தெரிகிறது.
அவரே உறுதிபடுத்தினார்...: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, வழக்கம் போல் புதன்கிழமை காலை வழக்குகளை விசாரிக்க தொடங்கினர்.
அப்போது ஆஜரான வழக்குரைஞர் ஒருவர், தான் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். அதற்கு தலைமை நீதிபதி, இந்த நீதிமன்றத்தில், "இது தான் எனக்கு கடைசி அமர்வாகும்' என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிமன்றத்தில் இருந்த வழக்குரைஞர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதியாக குடியரசு தலைவர் நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளதைத்தான் அவர் குறிப்பிடுவதாகக் தெரிவித்தனர்.
தலைமை நீதிபதி கெளலுக்கு, நீதிபதிகள் சார்பில் வியாழக்கிழமை காலையிலும் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சார்பில் பிற்பகலிலும் பிரிவு உபசார விழா நடத்தப்படுகிறது.
அதைத் தொடர்ந்து மற்ற வழக்குரைஞர்கள் சங்கமும், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கும் தலைமை நீதிபதிக்கு பிரிவு உபசார விழா நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
புதிய தலைமை நீதிபதி: உச்ச நீதிமன்ற நீதிபதியாக, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல் பதவி உயர்வு பெற்றதையடுத்து, கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் பணிபுரியும் மூத்த நீதிபதி ஹூலுவாடி கங்காதரப்பா ரமேஷ், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக திங்கள்கிழமை (பிப்.20) முதல் பதவியேற்பார் எனத் தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என, உயர்நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 1957-ஆம் ஆண்டு, ஜனவரி 16-ஆம் தேதி பிறந்த இவர், கடந்த 1982-ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி வழக்குரைஞராக பதிவு செய்து கொண்டார்.
கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதி கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2004, செப்டம்பர் 24 முதல் நிரந்தர நிதிபதியாக பணியாற்றி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com