11 நாள் இழுபறிக்கு முடிவு: 21-ஆவது முதல்வரானார் பழனிசாமி

தமிழகத்தின் 21-ஆவது முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை மாலை பொறுப்பேற்றார். இதன்மூலம், திராவிட கட்சிகளில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவர் முதன்முறையாக முதல்வராகப்
11 நாள் இழுபறிக்கு முடிவு: 21-ஆவது முதல்வரானார் பழனிசாமி

தமிழகத்தின் 21-ஆவது முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை மாலை பொறுப்பேற்றார். இதன்மூலம், திராவிட கட்சிகளில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவர் முதன்முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.
கடுமையான அரசியல் குழப்பங்கள், தொடர் இழுபறிகளுக்குப் பின்னர் அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்ததையடுத்து, உடனடியாகப் பதவியேற்பு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி நள்ளிரவு முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து, முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். சரியாக இரண்டு மாதங்கள் கழித்து, தனது முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜிநாமா செய்தார். பின்னர், பிப்ரவரி 5-இல் சட்டப் பேரவை அதிமுக குழுத் தலைவராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, தமிழகத்துக்கு கடந்த 9-இல் வருகை தந்த ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் ஆட்சி அமைக்கக் கோரி உரிமை கோரினார் சசிகலா.
அதேசமயம், முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஆளுரைச் சந்தித்து மனுவை அளித்தார். முன்னதாக, தன்னிடம் கட்டாயப்படுத்தி ராஜிநாமா கடிதம் வாங்கப்பட்டதாக பன்னீர்செல்வம் புகார் தெரிவித்திருந்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆளுநர் காத்திருப்பு: இரு அணிகளின் சார்பிலும் தனித்தனியாக ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதங்கள் அளிக்கப்பட்டதால், கடந்த ஒரு வாரமாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் எந்த முடிவையும் எடுக்காமல் காத்திருந்தார். இது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது.
நீதிமன்றத் தீர்ப்பும்-அழைப்பும்: சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, முதல்வராகும் வாய்ப்பை சசிகலா இழந்தார். இதையடுத்து, சட்டப் பேரவை அதிமுக குழுவின் புதிய தலைவராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
இதைத்த தொடர்ந்து, ஆளுநரை உடனடியாகச் சந்தித்த கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் குழு தங்களை ஆட்சி அமைக்க அழைக்க உரிமை கோரினர். அதேசமயம், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினரும் ஆளுநரைச் சந்தித்துப் பேசி தங்கள் தரப்பு விளக்கங்களை அளித்தனர்.
மூன்றாவது சந்திப்பு: இந்த நிலையில், கடந்த 14-ஆம் தேதி ஆளுநரைச் சந்தித்துப் பேசியதுடன், மீண்டும் புதன்கிழமை இரவு அவரைச் சந்தித்து எடப்பாடி கே.பழனிசாமி நினைவூட்டினார்.
இதைத் தொடர்ந்து, ஆளுநரின் அழைப்பின்பேரில், காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் இருந்த பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவை வியாழக்கிழமை காலை 11.30 முதல் நண்பகல் 12.10 மணி வரை சந்தித்து பேசினர்.
இதையடுத்து, ஆட்சி அமைக்குமாறும், 15 நாள்களுக்குள் சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கேட்டுக் கொண்டதாக ஆளுநரின் செயலர் ரமேஷ்சந்த் மீனா தெரிவித்தார்.
இதையடுத்து, 11 நாள்களாக நிலவி வந்த பெரும் அரசியல் குழப்பங்களுக்கு முடிவு காணப்பட்டு இயல்பு நிலை திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com