இளம் வழக்குரைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்: தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல்

இளம் வழக்குரைஞர்கள் முன்னேற்றத்துக்கு நீதிபதிகளும், மூத்த வழக்குரைஞர்களும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல் தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கெளலுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற பிரிவு உபசார நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன். உடன் காவல் துறை தலைவர் தே.க.ராஜேந்திரன், நீதிபதிகள் உள்ளிட்டோர்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கெளலுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற பிரிவு உபசார நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன். உடன் காவல் துறை தலைவர் தே.க.ராஜேந்திரன், நீதிபதிகள் உள்ளிட்டோர்

இளம் வழக்குரைஞர்கள் முன்னேற்றத்துக்கு நீதிபதிகளும், மூத்த வழக்குரைஞர்களும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல் தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தில்அவருக்கு வியாழக்கிழமை பிரிவு உபசார விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர், அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் உள்பட அரசு வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், ஏராளமான வழக்குரைஞர்கள் பங்கேற்றனர்.
விழாவில் தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் ஆர்.முத்துகுமாரசாமி, தலைமை நீதிபதி மேற்கொண்ட நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் அவர் வழங்கிய முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை எடுத்துரைத்து வாழ்த்தி பேசினார்.
அதன் பின்னர் நன்றி தெரிவித்து, தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல் பேசியதாவது:
வடகோடி மாநிலமான காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த நான், தில்லியில் பிறந்து, பஞ்சாப், ஹரியாணா வழியாக (உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி) இங்கு வந்தேன். பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, சுமார் இரண்டரை ஆண்டுகள் இருந்துள்ளேன்.
இங்கு பணிபுரிய வந்தபோது, மிகவும் குழப்பமான மனநிலையில் வந்தேன். அதன்பின், திருவள்ளுவர் எழுதிய, "எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு' என்ற குறளுக்கு ஏற்ப எனது பணியை தொடங்கி வெற்றியும் கண்டேன்.
தொடக்கத்தில் என்னை வழக்குரைஞர்களும், அவர்களை நானும் புரிந்து கொள்வதற்கு சிறிது காலம் தேவைப்பட்டது. தற்போது அந்த நிலை மாறிவிட்டது. நான் எப்படி செயல்பட்டேன் என்பதை நீங்களே (வழக்குரைஞர்கள்) முடிவு செய்து கொள்ளுங்கள்.
நீதிமன்றம் என்பது கோயிலை போன்ற புனிதமான இடமாகும். நீதிமன்றங்களில் உரிய நிவாரணம் கிடைக்காவிட்டால் அதன் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை குறைந்து விடும். எனவே,நிவாரணம் கேட்டு வரும் பொதுமக்களுக்கு நீதிமன்றம் நட்பு பாராட்டும் இடமாக இருக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள் நீதி நிர்வாக பணிகளுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, நீதித் துறை மற்றும் அதுசார்ந்த நிர்வாக காலிப்பணியிடங்களை ஆரம்பத்திலேயே நிரப்புவது முக்கியமாகும். நவீன தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தி, நீதி பரிபாலனம் சிறப்பாக இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இளம் வழக்குரைஞர்கள் பொருளாதாரரீதியில் பின் தங்கியிருக்கின்றனர். அவர்களின் முன்னேற்றத்துக்கு நீதிபதிகள், மூத்த வழக்குரைஞர்கள் வாய்ப்பளித்து ஊக்குவிக்க வேண்டும் என்றார் எஸ்.கே.கெளல்.
எனக்கு வாய்த்த அதிர்ஷ்டம்
காதல், வீரம், சுயமரியாதை ஆகியவை தமிழ் கலாசாரத்தின் அடையாளங்களாகும். வரலாற்றுரீதியாக, தமிழ் மொழி சிறந்த பாரம்பரியம், கலாசாரத்தை கொண்டுள்ளது.
தமிழர்களின் பண்பாட்டை விளக்கும் விதமாக, "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றும், "தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்றும் சங்ககால தமிழ் புலவர்களில் ஒருவரான கணியன் பூங்குன்றனார் எழுதியுள்ளார். இவ்வளவு பாரம்பரியம், கலாசாரமிக்க இடத்தில் பணிபுரிந்தது எனக்கு வாய்த்த அதிர்ஷ்டமாகும்.
உண்மையில், சென்னையை விட்டு செல்வது மிகவும் வருத்தமாக உள்ளது. குறிப்பாக, தமிழ் மக்களின் அரவணைப்பு மற்றும் விருந்தோம்பலை இழக்கிறேன் என்றார் தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com