எண்ணெய் சிதறல்களை அகற்றுவதில் தொடரும் சவால்கள்!

கப்பலில் இருந்து வெளியேறிய எண்ணெய் படலத்தை அகற்றும் பணியின்போது, சிதறிய எண்ணெய் படிமங்களை தூய்மைப்படுத்தும் பணி கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நடைபெற்று
எர்ணாவூர் கடற்கரையில் எண்ணெய்ச் சிதறல்களை அகற்றி, தூய்மை தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் பணியில் கடலோரக் காவல் படையினர்.
எர்ணாவூர் கடற்கரையில் எண்ணெய்ச் சிதறல்களை அகற்றி, தூய்மை தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் பணியில் கடலோரக் காவல் படையினர்.

கப்பலில் இருந்து வெளியேறிய எண்ணெய் படலத்தை அகற்றும் பணியின்போது, சிதறிய எண்ணெய் படிமங்களை தூய்மைப்படுத்தும் பணி கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் பல்வேறு சிரமங்களும், சவால்களும் நீடிக்கின்றன.
எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த ஜனவரி 28-ல் எம்.டி. மாபில் எனும் கப்பல் மோதியதில் எம்.டி.டான் காஞ்சிபுரம் என்ற கப்பல் சேதமடைந்தது. இதிலிருந்து வெளியேறிய எண்ணெய்க் கழிவுகள் எர்ணாவூர் பாரதியார் நகர் கடற்கரை அருகே படலமாகத் தேங்கியது.
இதனை வாளிகள் மூலம் அகற்றும் பணியை ஜனவரி 29 முதல் பிப்ரவரி 9 வரை 12 நாள்கள் கடலோரக் காவல் படையினர், பல்வேறு துறைகளைச் சார்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
இதில் அகற்றப்பட்ட சுமார் 300 டன் எண்ணெய்க் கழிவுகள் எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, உயிரி தொழில்நுட்பம் மூலம் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாதவகையில் அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தொடரும் சவால்கள்: இந்த நிலையில், எண்ணெய்க் கழிவுகளை அகற்றும்போது ஏற்பட்ட சிதறல்களால் இந்தப் பகுதி முழுதும் மாசடைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், பணிகள் முடிந்தபாடில்லை. இதற்கு காரணம் எண்ணெய்ச் சிதறல்கள் தடுப்புச் சுவர் பாறாங்கற்கள் முழுவதும் பரவியுள்ளது. எண்ணெயைக் கரைக்கும் ரசாயனம் கலந்த கலவையை முதலில் எண்ணெய்ச் சிதறல்கள் மீது தெளிக்கின்றனர். பின்னர் மிகுந்த அழுத்தத்துடன் பிஸ்டன்கள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து எண்ணெயைக் கரைக்கின்றனர். இருப்பினும் அவ்வளவு எளிதாக பணியாக இது இல்லை என்பது தெரியவந்துள்ளது.
தூய்மைப்படுத்தப்படும் எண்ணெய் கலந்த தண்ணீர் மீண்டும் கடலில்தான் கலக்கிறது. இதனால் கடல் மணல் கருப்பாகி வருகிறது. மேலும் பாறாங்கற்களின் இடுக்குகளில் எண்ணெய்ச் சிதறல்கள் பெருமளவில் புகுந்துள்ளதால் இவற்றை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்னும் பல நாள்கள் தொடர்ந்து இப்பணியைச் செய்தாலும் முழுமையாக தூய்மைப்படுத்த முடியுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்கிறார் சமூக சேவகர் கே.சுப்பிரமணி.
திட்டமிடலில் தோல்வியே பிரச்னைக்கு காரணம்: எண்ணெய்ப் படலம் பாதுகாப்பான இடத்தில்தான் கரைஒதுங்கியிருந்தது. அவை மீண்டும் கடலுக்குள் அடித்து செல்லப்படும் வாய்ப்பு குறைவாக இருந்தது. இதுகுறித்து ஆய்வு செய்யாமல் அகற்றும் பணி நடைபெற்றது.
மீனவர்களின் கொந்தளிப்பு, ஊடகங்களின் மூலம் பரவிய அழுத்தம் காரணமாக அகற்றல் பணியை உடனடியாகத் தொடர்ந்தனர். எனவே திட்டமிடும் முன்பே வேலையைத் தொடங்கியதே இந்தப் பிரச்னைக்கு மூல காரணமாக உள்ளது.
மேலும், வேலை தொடங்கும்போது சுமார் 4 டன் மட்டுமே இருக்கலாம் என அணுமானித்தது முதல் தவறு, குழாய்கள் மூலம் உறிஞ்சி எடுக்கத் திட்டமிட்டது இரண்டாவது தவறு. இதனால் கெட்டியாக உள்ள எண்ணெயை கழிவுநீர் லாரிகள் மூலம் உரிஞ்சத் திட்டமிட்டு மூன்று லாரிகள் மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு நாசமானது என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு வாளிகள் மூலம் அகற்ற முற்பட்டது.
எண்ணெய் படலத்தின் நச்சுத் தன்மையைக் கூட பரிசோதனை செய்யாமல் தன்னார்வலர்கள், மாணவர்கள் என அனைவரையும் பங்கெடுக்க வைத்ததுதான் தவறுகளின் உச்சகட்டம் என்கிறார் சமூக ஆர்வலர் சி.பாலசுப்பரமணி.

எளிய வழியை பின்பற்றாதது ஏன்?
எண்ணெய்ப் படலத்தை வாளிகள் மூலம் அகற்ற முற்படாமல் முறையாகத் திட்டமிட்டிருக்க வேண்டும். சுமார் 200 லாரி கழிவுகள் இருக்கிறது என்பதை முன்பே கண்டறிந்திருக்க வேண்டும். பிறகு தடுப்புச் சுவர் பாறாங்கற்களை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றி கடற்கரைக்கு பாதை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
பின்னர் தார் எடுத்துச் செல்லும் லாரிகளை தேங்கியிருந்த எண்ணெய் படலம் அருகே எடுத்துச் சென்றிருந்தால் எவ்வித சிரமமும் இல்லாமல், குறைந்த நாள்கள், மனித உழைப்பு சேமித்திருக்க முடியும். தார் லாரிகளின் எடுத்து சென்றிருந்தால் இவற்றை மறுபயன்பாட்டிற்கோ அல்லது மீண்டும் கப்பல் எரிபொருளாகவோ பயன்படுத்தியிருக்க முடியும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com