ஓ.பன்னீர்செல்வம் - சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் மோதல்: காவலர் உள்பட 3 பேர் காயம்

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும், அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், காவலர் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
மோதல் ஏற்பட்டதையடுத்து, சென்னை கிரீன்வேஸ் சாலையில் குவிக்கப்பட்ட போலீஸார்
மோதல் ஏற்பட்டதையடுத்து, சென்னை கிரீன்வேஸ் சாலையில் குவிக்கப்பட்ட போலீஸார்

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும், அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், காவலர் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
அதிமுகவில் பிளவு ஏற்பட்ட பின்னர், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு அதிமுகவினர் ஆதரவு தெரிவித்துவருகின்றனர். இவரது வீட்டுக்கு அருகிலேயே சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீடும் உள்ளது.
இந்த நிலையில், புதிய அமைச்சரவையில் பதவியேற்க வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் சி.வி. சண்முகம் தனது வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து, அங்கிருந்த அவரது ஆதரவாளர்கள், அங்கு நின்றிருந்த பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களை அங்கிருந்து செல்லும்படி கூறினார்.
இதில் ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றவே, இரு தரப்பினரும் கற்களை ஒருவர் மீது ஒருவர் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். போலீஸார், இரு தரப்பினரையும் அங்கிருந்து கலைந்துபோகச் செய்தனர். இந்தச் சம்பவத்தில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த பாலாஜி (45), ஆயுதப் படைக் காவலர் சங்கரநாராயணன் (27) உள்பட 3 பேர் காயமடைந்தனர். மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, போலீஸார் இருவரது வீடுகளிலும் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், பதவியேற்ற சி.வி.சண்முகம் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு சுமார் 300 போலீஸார் குவிக்கப்பட்டனர்.
பெருநகர காவல் துறை கூடுதல் ஆணையர் கே.சங்கர், இணை ஆணையர் மனோகரன், துணை ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து அபிராமபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரில் இருந்த சிவப்பு சுழல் விளக்கு, தேசிய கொடி அகற்றம்


முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பேற்றதும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த, அவரது காரில் இருந்த சிவப்பு சுழல் விளக்கு, தேசிய கொடி ஆகியன உடனடியாக அகற்றப்பட்டன.
அதேபோல், முதல்வருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறைக்கப்பட்டு, முன்னாள் முதல்வருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அதிமுகவில் அசாதாரண நிலை நீடிப்பதால், பன்னீர்செல்வத்துக்கும், அவர் வீட்டுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com